Header Ads



பாகிஸ்தானில் எமது வீரர்களை, பலிக்கடாவாக்க தயாரில்லை - தயாசிறி

பாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது  டுபாயிலேயே நடைபெறவுள்ளது. எமது வீரர்களை  அங்கு பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லையென இணை அமைச்சரவைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது  இணை அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கேள்வி: பாகிஸ்தான் அணியுடன் விளையாட இலங்கை பாகிஸ்தான் செல்லுமா?

பதில்: பாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது  டுபாயிலேயே நடைபெறவுள்ளது. 

பாகிஸ்தான் செல்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. ஏற்கனவே அந்த நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் கசப்பான அனுபவங்களை எமது வீரர்கள் பெற்றுள்ளனர்.  

எனவே பாதுகாப்பு தொடர்பான நூறுவீத உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே நாங்கள் பாகிஸ்தான் போகலாம். 

எமது வீரர்களை பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லை.  ஆனால் பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவை நாங்கள் பலப்படுத்தவேண்டும்.   அந்த நாடு  எமக்கு அவசரத்துக்கு உதவுகின்றது. தற்போது  கூட  உதவி வருகின்றது.  

கேள்வி:   ஒரு இருபதுக்கு இருபது  போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதே அதற்கு வீரர்களை அனுப்புவீர்களா?

பதில்: அது தொடர்பில் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. நூறுவீதம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் பரிசீலிக்கலாம். 

கேள்வி: கிரிக்கெட் தெரிவு குழு இராஜினாமா செய்துள்ள நிலையில் எவ்வாறு  இந்தப் போட்டிக்கான வீரர்களை தெரிவுசெய்வீர்கள்?

பதில்: கிரிக்கெட் தெரிவுக்குழு இராஜினாமா செய்தபோதும் 25 பேர் கொண்ட குழுவை  தெரிவு செய்து தருமாறு நாம் அவர்களிடம்  கேட்டுக்கொண்டோம். அதற்கேற்ப தெரிவு நடைபெற்றது.

No comments

Powered by Blogger.