Header Ads



ஜாமிஆ நளீமிய்யாவில், சமாதானம் பற்றிய கல்வி முகாம்

2017ம் ஆண்டிற்கான மூன்று நாள் கல்வி முகாம் 'நற்பிரஜைத்துவமும் சமாதான சகவாழ்வும்' எனும் தலைப்பில் வாமி நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜாமிஆ நளீமிய்யா மகாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் (19-21.09.2017) வரைஇடம்பெற்றது. இந்த நிகழ்வு பின்வரும் இலக்குகளைக் குறிக்கோள்களாகக் கொண்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நற்பிரஜைகளாக வாழ்வது மற்றும் சமாதான சகவாழ்வு என்பன தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தல்.

நற்பிரஜைத்துவம் மற்றும் சமாதான சகவாழ்வு தொடர்பாகக் காணப்படுகின்ற தப்பபிப்பிராயங்களை சீர்செய்தல்.

இலங்கையில் சமாதான சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிதல்.

சமாதான சகவாழ்வுக்கான தடைகளை இனங்காணல்.

இத்துறை தொடர்பாக மென்மேலும் ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்குத் தூண்டுதல்.

இந்தக் கல்வி முகாமில் ஜாமிஆ நளீமிய்யாவின் கௌரவப் பணிப்பாளர் கலாநிதி ஆ.யு.ஆ ஷுக்ரி அவர்கள் பிரதம அதிதியாகவும் வாமி நிறுவனத்தின் இலங்கைக் கிளைப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆ.ணு.ஆ நஜ்மான் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் 'நற்பிரஜைத்துவம், சமாதான சகவாழ்வு பற்றிய கருத்தியலும் அதன் முக்கியத்துவமும்' எனும் தலைப்பிலும், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி உப அதிபர் அஷ்ஷெய்க் மிஹ்ழார் அவர்கள் 'நற்பிரஜைத்துவம், சமாதான சகவாழ்வு என்பன தொடர்பான மதங்களது பார்வை' எனும் தலைப்பிலும், கலாநிதி P.ஆ.ஆ இர்பான் அவர்கள் 'சர்வதேச ரீதியாக வரலாற்று நெடுகிலும் சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்ப முஸ்லிம்களது பங்களிப்பு' எனும் தலைப்பிலும், ருஹுன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்மிக லியனகே அவர்கள் 'இலங்கையில் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதில் உள்ள சவால்களும் சந்தர்ப்பங்களும்' எனும் தலைப்பிலும், அஷ்ஷெய்க் ளு.ர்.ஆ பழீல் அவர்கள் 'நற்பிரஜைத்துவம் மற்றும் சமாதான சகவாழ்வு ஒரு நடைமுறைக் கண்ணோட்டம்' எனும் தலைப்பிலும் உரைகளை நிகழ்த்தினார்கள். 

ஜாமிஆவின் மாணவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கான குழுச் செயற்பாடுகளும் இடம்பெற்றதோடு இந்நிகழ்வோடு தொடர்பாக மாணவர்களது பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

உலகில் சமாதான சகவாழ்வுக்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தாய்லாந்து, ருவண்டா, சிங்கப்பூர் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளது பெயர்கள் குழுக்களுக்காக வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 
கல்வி முகாமின் இறுதியில் பரிந்துரைகளாகக் கீழ்வரும் தீர்மானங்கள் வெளியிடப்பட்டன.
சகல மதங்களையும் இனங்களையும் சார்ந்த குழுக்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவது உடனடித் தேவையாக இருப்பதனால் இது விடயமாக இலங்கை வாழ் ஒவ்வொரு குடிமகனும் தன்னாலான பங்களிப்பைச் செய்வது தார்மீகக் கடமையாகும்.
அரசியல், பொருளாதாரம், சட்டம், ஊடகம், சமயம், சமூகவியல் போன்ற எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்களது ஒருமித்த பங்களிப்போடு தான் சமாதான சகவாழ்வும் நற்பிரஜைத்துவமும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தேசப்பற்றோடு இருப்பதும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தன்னாலான பங்களிப்பைச் செய்வதும் இஸ்லாமியப் போதனைகளின் பாற்பட்டதாகும்.
ஒவ்வொரு மதத்திலும் உள்ள அடிப்படையான தனித்துவமான இனத்துவ அடையாளங்களை பிற சமயங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்கள் அறிந்திருப்பதும் சகித்துக் கொள்வதும் மதிப்பதும் சமாதான சகவாழ்வுக்கு வழிவகுக்கும்.

இஸ்லாம் மித வாதத்தையும் நடுநிலைத் தன்மையையும் போதிக்கும் மார்க்கம் என்பதால் எந்தவொரு மதத்தின் பெயராலும் அந்த அடையாளங்களை சுமந்த நிலையில் இடம்பெறும் தீவிரவாத, பயங்கரவாத செயற்பாடுகள் அனைத்தையும் அது வன்மையாகக் கண்டிக்கிறது. 
கடும் போக்குக் கொண்ட அனைத்து சமயங்களையும் சேர்ந்த குழுக்களையும் தனிமனிதர்களையும் நல்வழிப்படுத்தி நெறிப்படுத்துவதற்கு சகல சமயத்தவர்களும் குறிப்பாக, மதத்தலைவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான பலமான, நெறிப்படுத்தப்பட்ட மூலோபாயத் திட்டமொன்று வகுக்கப்பட்டு கிராம மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை, தனிநபர் மட்டத்திலிருந்து அரச இயந்திரம் வரை இது அமுலாக்கப்பட வேண்டும்.  இலங்கையின் கல்வித் திட்டத்தில் சமாதானக் கல்விக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்.  தொடர்பூடகங்கள் அனைத்தும் சகவாழ்வுக்கு ஒத்துழைக்கும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறை வகுக்கப்படல் வேண்டும்.

No comments

Powered by Blogger.