Header Ads



நிராகரித்திருப்பது வருத்தமளிக்கிறது - ஹக்கீம்

எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார்.

அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டது. இதன்பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், முதற்தடவையாக பிரதமர் ஒருவர் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளுக்கு தலைமைத்துவம் வகிக்கின்றார். சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இதில் பங்களிப்புச் செலுத்துகின்றனர்.

அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் நாம் போதியளவு அவகாசத்தை வழங்கியுள்ளோம்.

பல தரப்பட்டவர்களின் கருத்துக்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. மாறுபட்ட கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் பாரிய அர்ப்பணிப்பொன்று தேவைப்படுகிறது என்றார்.

அதேநேரம், தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக சமர்ப்பித்திருந்த யோசனைகள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் அரசியலமைப்பு சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

1 comment:

  1. அந்தக் கட்சிகளின் பெயரை வெளிப்படுத்துங்க ஹக்கீம்

    ReplyDelete

Powered by Blogger.