Header Ads



பாகிஸ்தான் பிரதமராக, அப்பாசி பதவியேற்பு

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஷாகித் ககான் அப்பாசி, (Shahid Khaqan Abbasi) நேற்றுக் காலை பாகிஸ்தான் பிரதமராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்து வைத்துள்ளதாக  பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நவாஸ் ஷெரிப்க்கு கடந்த 28ஆம் திகதி உத்தரவிட்டதையடுத்து, தனது பதவியை அவர் இராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி (என்) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய பிரதமராக நவாஸின் இளைய சகோதரர், ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, பிரதமராக பதவியேற்க முடியும் என்பதால், இடைக்காலப் பிரதமராக அமைச்சர் ஷாகித் ககான் அப்பாசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றதையடுத்து இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்ட ஷாகித் ககான் அப்பாசி பிரதமராக நியமனம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றுக் காலை பாகிஸ்தான் பிரதமராக அப்பாசி உத்தியோகபூர்வமாக பதவி ஏற்றுக்கொண்டார்.

இஸ்லமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக அப்பாஸி பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து 46 பேர் கொண்ட மந்திரிசபையும் அவருடன் பதவி ஏற்றது.

காவ்ஜா முகம்மது ஆசிப் வெளியுறவுத்துறை மந்திரியாகவும், ஆசன் இக்பால், மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். பாதுகாப்புத்துறை மந்திரியாக குர்ரம் தாஸ்டகிர் பதவி ஏற்றுள்ளார். 

No comments

Powered by Blogger.