Header Ads



ரவிக்கு எதிரான பிரேரணை, இன்று தீர்மானம்

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகக் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், இன்று செவ்வாய்க்கிழமை (08) தீர்மானிக்கப்படவுள்ளது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று நண்பகல் 12 மணிக்குக் கூடுகின்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்திலேயே, இந்தப் பிரேரணை தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.  

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் பிரகாரமே, அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்படும். அதன் பின்னரே, அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும்.  

திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில், அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமளித்ததன் பின்னரே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.  

ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் 33 பேர் கையொப்பமிட்டு, இந்தப் பிரேரணைகளை கடந்த 3ஆம் திகதியன்று கையளித்திருந்தனர்.  

இதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதியமைச்சராகப் பதவிவகித்த காலத்தில், அவருக்கு எதிராக, பல்வேறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 37 பேரினால், 2016ஆம் ஆண்டும், நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.  

அந்த யோசனைக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

No comments

Powered by Blogger.