Header Ads



"தீவிரவாதத்தின் இதயத்தின் மீது, எமது பிடியை விஸ்தரிக்க தீர்மானித்திருக்கிறோம்”

வடக்கு சிரியாவில் மற்றொரு எல்லை தாண்டிய இராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு இருப்பதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

குர்திஷ் போராளிகளின் அச்சுறுத்தல் காரணமாக துருக்கி தனது எல்லையில் மேலதிக துருப்புகளை குவித்திருப்பதோடு அதன் தென்கிழக்கு மாகாணமான கிலிஸில் பீரங்கிகளையும் நிறுவியுள்ளது.

அதேபோன்று சிரியாவின் குர்திஷ் கட்டுப்பாட்டு பிராந்தியமான அப்ரினில் துருக்கி டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

துருக்கி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வடக்கு சிரியாவில் எல்லை கடந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) மற்றும் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது. இந்த இரு தரப்பையும் தீவிரவாத குழுக்களாகவே துருக்கி கருதுகிறது. யூப்ரடிஸ் கேடயம் என்ற இந்த படை நடவடிக்கை கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது.

“யூப்ரடிஸ் கேடய படை நடவடிக்கையில் புதிய நகர்வாக தீவிரவாதத்தின் இதயத்தின் மீது எமது பிடியை விஸ்தரிக்க நாம் தீர்மானித்திருக்கிறோம்” என்று எர்துவான் குறிப்பிட்டுள்ளார். சிரிய குர்திஷ்களுக்கு ஆதரவளிப்பதை ஒட்டி அமெரிக்காவுடனான துருக்கியின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஐ.எஸ் குழுவின் கோட்டையாக இருக்கும் ரக்கா நகரை கைப்பற்றுவதற்கு சிரிய குர்திஷ்களுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

வடக்கு சிரியாவில் குர்திஷ்கள் சுயாட்சி பிராந்தியம் ஒன்றை நிறுவும் முயற்சி குறித்து துருக்கி கவலை அடைந்துள்ளது. அது தனது ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று துருக்கி அஞ்சுகிறது. துருக்கி உள்நாட்டில் குர்திஷ் பிரிவினைவாதிகளுடன் பல தசாப்த காலமாக போராடி வருகிறது.

No comments

Powered by Blogger.