Header Ads



மேல் மாகாண சபையில் குழப்பம், செங்கோலுக்கு சேதம்

20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மேல் மாகாண சபை அமர்வில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக செங்கோல் சேதமடைந்துள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு மாகாண சபைகளின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த சட்டமூலம் ஒவ்வொரு மாகாண சபைகளிலும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு வருகின்றது.

கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் வட மத்திய மாகாண சபை குறித்த திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. ஊவா மாகாண சபையில் வாக்கெடுப்பு தோல்வியைத் தழுவியிருந்தது.

இந்நிலையில் 20வது திருத்தச் சட்டம் இன்று -28- மேல் மாகாண சபையில் வாக்கெடுப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டவுடன் சபையினுள் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதனையடுத்து சபை அமர்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் திருத்தச் சட்டத்தை வாக்கெடுப்பிற்காக மீண்டும் சபையில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இதனை ஆட்சேபித்தனர்.

சபை மீண்டும் கூடி 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு ஆரம்பமாகவிருந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான மாகாண சபை உறுப்பினர்கள் சபையின் செங்கோலை எடுத்துச் செல்ல முயன்றனர்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் அதனைத் தடுக்க முனைய, இரு தரப்பினருக்குமான இழுபறியில் செங்கோல் சேதமடைந்துள்ளது. அதனையடுத்து செங்கோல் சபையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.