Header Ads



அளுத்கம குற்றவாளிகளுக்கு, எப்போது தண்டனை கொடுப்பீர்கள்..?

அளுத்கம, பேருவளை மற்றும் தர்காநகரில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்ற செய்தியை     ஜப்னா முஸ்லிம் இணையம் மூலம் படிக்க முடிந்தது.

இது நல்ல விசயம்தான். இதற்காக உழைத்தவர்களுக்கு நன்றிகள். இந்த நஷ்டயீட்டை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் உரித்துடையவர்கள்தான்.

அதேவேளை அளுத்கம கலவரத்தில் முஸ்லிம்களின் உயிர்களை குடித்து, முஸ்லிம்களுக்கு காயம் ஏற்படுத்தி, முஸ்லிம்களின் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள் என மூத்த முஸ்லிம் சட்டத்தரணியும், சமூக ஆர்வலருமான சிராஸ் நூர்தீன் கேள்வி எழுப்பினார்.

அவர் இதுகுறித்து மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி நீதிமன்றத்தில் இதுதொடர்பிலான வழக்கு நடைபெற்றது. இது தொடர்பான பொலிஸ் உயர் அதிகாரி நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் செம்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி கண்டிப்பாக நீதிமன்றுக்கு வரவேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

அளுத்தகம குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களும்  விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் திட்டமிட்டு தப்பிக்கச் செய்யப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாலே இந்த அநீதி தொடருகிறது.

குற்றவாளிகளை சுதந்திரமாக உலாவ விட்டமையானது, முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட சிந்திப்பவர்களுக்கு காண்பிக்கப்படும் பச்சைக் கொடி போன்றதாக அமைந்துவிடும். எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் அளுத்தகம கலவரத்தில் முஸ்லிம்களை கொலைசெய்த குற்றவாளிகளை கைதுசெய்து சட்டதின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க உரிய அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனைச் செய்யலாம். பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுதொடர்பில் துரித விசாரணையை கோரலாம். ஜனாதிபதி, பிரதமர் என உயர் மட்டத்தினருக்கு அழுத்தம் கொடுக்கலாம். விசாரணை தாமதிக்கப்படுவது, குற்றவாளிகள் கைது செய்யப்படாமலிருப்பது போன்றவைகளுக்காக குரல்கொடுத்தால் உரிய திர்வு கிட்டும்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கிடைத்த நஷ்யீட்டைவிட, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி சுதந்திரமாகச் செயற்படும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது மிகச்சிறந்தது எனவும் சிராஸ் நூர்தீன் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.