Header Ads



ராம் ரஹீம் ஓரு 'காட்டு விலங்கு' - மிகக் கடும் சொற்களால் எழுதப்பட்டிருந்த தீர்ப்பு..!

பாலியல் வல்லுறவு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய இந்திய சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங், கருணை காட்ட வேண்டிய தேவையில்லாத "காட்டு விலங்கு" என்று நீதிபதி ஜக்தீப் சிங் தெரிவித்திருக்கிறார்.

குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு போலிஸ் பாதுகாப்பு அளித்திருந்த நிலையில், அவருடைய சீடர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியிருப்பது, "காவல் பாலியல் வல்லுறவு" என்றும், அதற்கு அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்றும் நீதிபதி ஜக்தீப் சிங் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

1999 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் வரை தன்னுடைய பெண் சீடர்கள் இருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக குர்மித் ராம் ரஹீம் சிங் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

"40 முதல் 50 பெண்கள் வரை, தங்களை பாலியல் வல்லுறவுக்கு உட்ப்படுத்தியதாக குற்றஞ்சாட்ட முன்வந்திருந்தனர். அவர்கள் இன்னும் புலனாய்வு மேற்கொள்ள கோருவர்" என்று அவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

தன் மீதான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டையும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள வழக்கில் குறிப்பிடப்படுகின்ற இரண்டு கொலை குற்றச்சாட்டுக்களையும் ராம் ரஹீம் சிங் மறுத்து வருகிறார்.

வெள்ளிக்கிழமையன்று பாலியல் வல்லுறவு வழக்கில் ராம் ரஹீம் சிங் "குற்றவாளி" என்று தீர்ப்பு வெளியானவுடன், ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
திங்கள்கிழமை தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக சாமியார் ராம் ரஹீம் சிங் இருந்த சிறைச்சாலைக்கு ஹெலிகாப்டர் மூலம் நீதிபதி செல்ல வேண்டியதாயிற்று.

மிகக் கடுமையான சொற்களால் எழுதப்பட்டிருந்த இந்த தீர்ப்பில், தன்னை கடவுளின் மனிதன் என்று காட்டிக்கொண்டு, தனக்கிருந்த தகுநிலை மற்றும் அதிகாரத்தை சுய ஆதாயத்திற்கு பயன்படுத்தியுள்ளதால், இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜக்தீப் சிங் தெரிவித்திருப்பதாக பிபிசியின் செய்தியாளர் கீதா பாண்டே தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இந்த சாமியாரை "கடவுளின்" பீடத்தில் வைத்து மதிக்கிறார்கள். ஆனால், அத்தகைய ஏமாறக்கூடிய மற்றும் அவரைக் கண்மூடிததனமாக பின்பற்றும் சீடர்கள் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தி, மிகவும் மோசமான தன்மையிலான குற்றத்தை , இவர் புரிந்துள்ளார்" என்று இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ராம் ரஹீம் சிங் மிகவும் செல்வாக்குமிக்க நபராக இருப்பதால், "இதுபோன்ற குற்றவாளிகளாக இருப்போருக்கு, தீய வழியைவிட்டு விலகும் செய்தியை வழங்குவதாக, இவருக்கு வழங்கப்படும் தண்டனை அமைய வேண்டும்" என்று இந்த நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

"அதிகபட்ச தண்டனைக்கு குறைவாக வழங்குவது என்பது, நாட்டின் ஒட்டுமொத்த மனச்சாட்சிக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

"உயர் ரத்த அழுத்தம், கடும் நீரிழிவு மற்றும் கடுமையான முதுகுவலி பாதிப்பு" போன்ற உடல்நல குறைவால் ராம் ரஹீம் துன்புறுவதாலும், பல்வகையான சமூகப் பணிகளில் ஈடுபட்டும், மருத்துவமனைகளை நடத்தியும், பிற மக்கள் நலப்பணிகளை செய்தும் வருகின்ற "சட்டத்தை மதிக்கும் குடிமகன்" என்பதால், அவருக்கு மிதமான தண்டனை மட்டுமே வழங்கப்பட வேண்டுமென ராம் ரஹீம் சிங்கின் வழக்கறிஞர்கள் வாதாடியிருந்தனர்.

தன்னுடைய பயபக்தி மிக்க சீடர்களையே விட்டுவைக்காத இந்த சாமியார், "காட்டு விலங்கு" போல செயல்பட்டிருப்பதால், இவருக்கு இரக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கும் நீதிபதி, ராம் ரஹீமின் வழங்கறிஞர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டார்.

No comments

Powered by Blogger.