Header Ads



சர்ச்சையில் சிக்கினார் பூஜித்

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, (ஐ.ஜி.பி) பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை, அடிப்பதற்கு முயன்ற சம்பவம் தொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளது. 

அந்த வீடியோ காட்சியின் பிரகாரம், தன்னுடைய வலது கையையை அடிப்பதற்காக உயர்த்தும், பொலிஸ்மா அதிபர், அந்த ஊழியரை அடிக்கவில்லை. எனினும், இரண்டொரு தடவைகள் கடுமையாக எச்சரித்ததன் பின்னர், அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றுவிடுகின்றார். 

இந்தச் சம்பவம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கடுமையான நடந்துகொண்ட நான்காவது சம்பவமாகுமென சுட்டிக்காட்டி, ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

பொலிஸ் தலைமையகத்தில், ஒவ்வொருநாளும் காலை 8:30 மணிமுதல் 8:45 மணிவரையிலும், தியானம் இடம்பெறும். இதில், சகலரும் கட்டாயமாக பங்கேற்கவேண்டுமென்று, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கட்டளையிட்டிருந்தார். அது அவருடைய தனது தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்டதாகும்.  

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்படுகின்றது. அதாவது, 2017 ஏப்ரல் 11ஆம் திகதி முதலே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொலிஸ்மா அதிபராக  பதவியேற்றதன் பின்னர், பேர்கர் இனத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான லுடோவையிக் என்பவரையே, முதலாவதாக தாக்கியதாகும், அவர், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமரகோன் பண்டா என்ற சிவில் பணியாளர் மற்றும் மின்னுயர்த்தியில் பயணியாற்றும் பண்டா என்பவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மின்னுயர்த்தியின் பணியாளரின் கழுத்தை பிடித்து ஆட்டியிழுக்கும் காட்சியே அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

இதேவேளை, தன்னைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தபோவதாக, பெண் பொலிஸ் அதிகாரியொருவரையும் பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளார் என்றும், அப்பெண் அதிகாரி, சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி பட்டியலில் அடுத்தப்படியாகவே, இந்த வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது என, கூறப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.