Header Ads



புட்டின் வழங்கிய பரிசை, தேசிய மரபுரிமையாக்கினார் ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று -02- தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த போது ரஷ்ய ஜனாதிபதி விளடீமீர் புட்டின் வழங்கிய, அரச வாள் கண்டி அரச காலத்திற்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டைய கால ஆயுதங்கள் சம்பந்தமான விசேட நிபுணரான இஸ்ரேலியர் எலோக்ஸ் பஃர்கர்கே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவர் ரஷ்ய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சின் தொல் பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த வாள் குறித்து எலோக்ஸ் பஃர்கர்கே மேலும் தெரிவிக்கையில்,

“இந்த வாள் கூரிய கத்தியுடன் கூடிய வாள். உருக்கில் செய்யப்பட்டுள்ள இந்த வாளின் பிடி தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

வாள் கடந்த காலத்தில் போருக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். வாளின் நுனிப்பகுதி நன்கு கூர்மையாக உள்ளது.

வாளின் படி தங்க நிறத்திலான உலோகத்தில் செய்யப்பட்டுள்ளதுடன் அது உயர் தரமான வடிவமைப்பு. வாளின் பிடியில் கற்பனையான மிருகத்தின் முகம் காணப்படுகிறது. சிங்கத்தின் உருவமும் உள்ளது.

சிங்கத்தின் கண்கள் சிகப்பு நிறமாக ஒளிரும் வகையில் இருக்கின்றது. மிகவும் அற்புதமாக இந்த வாள் வடிமைக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

வாள்

தயாரித்த நாடு - இலங்கை

காலம் - 19 ஆம் நூற்றாண்டு

உலோகம் - உருக்கினால் செய்யப்பட்டு தங்கமூலாம் பூசப்பட்டுள்ளது.

வாளின் நீளம் - 480.5 மி.மீ

வாளின் அகலம் - 23.5 மி.மீ.

வாள் உறையின் நீளம் - 535.5 மி.மீ.

வாள் உறையின் அகலம் - 6.35 மி.மீ

No comments

Powered by Blogger.