Header Ads



இம்மாதத்தில் மாத்திரம் 3500 ரோஹின்யா முஸ்லிம்கள், பங்களாதேஷுக்கு தப்பியோட்டம்

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாதுகாப்பு படையினருடன் மிக கடுமையான மோதல்களில் ஈடுபட்டுவரும் இவர்களை ஒடுக்கும் வகையில் ரக்கினே பகுதியை சுற்றிவளைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களைத் அடுத்து உயிருக்கு பயந்து ரோஹிங்யா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். இந்த மாதத்தில், ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதை அடுத்து அதிகமான எண்ணிக்கையில் மக்கள் தப்பியோடுவதாக கூறப்படுகிறது.

இம்மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 3500 ரோஹிங்யா முஸ்லீம்கள் எல்லையை கடந்து வங்கதேசத்திற்கு தப்பி வந்துள்ளனர் என வங்கதேசத்தை சேர்ந்த ரோஹிங்யா அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் சுமார் 4 லட்சம் ரோஹிங்யா அகதிகள் வசித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதுவும் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் வங்கதேசத்திற்குள் தப்பி வந்ததாக அரசு கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.