Header Ads



இலங்கையில் 2 காரணங்களுக்காக, கருக்கலைப்புக்கு சட்டம் கொண்டுவர முயற்சி

இலங்கையில் இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக சிறப்பு சமூக மருத்துவ நிபுணரான டாக்டர் கபில ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுகாதார கல்வி பணியகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் இதனை அவர் தெரிவித்தார்.

பாலியல் வன்முறையால் உருவாகும் மற்றும் மரபணு பிறழ்வுக்குள்ளான கருக்களை கலைப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் இச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் கூறினார்.

உத்தேச சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் கருவை கலைப்பதா? அல்லது சுமப்பதா? என்ற தீர்மானத்தை தாய் தான் எடுக்க வேண்டும். அரசு வைத்தியசாலையொன்றில் கருக்கலைப்புக்கான சிபாரிசுகளை உரிய இரு மருத்துவ நிபுணர்கள் செய்ய வேண்டும்" என்றும் டாக்டர் கபில ஜயரட்ன கூறுகிறார்.

"தாயொருவர் கர்ப்பம் தரித்து 20வது வாரத்தில் சிசுவின் மரபணு பிறழ்வு பற்றி வைத்தியர்களினால் இனம் காண முடியும். பிறப்பு குறைபாடுடைய பிரசவத்தினால் தாய்மார்கள் பல்வேறு துன்பங்களை வாழ் நாள் முழுவதும் அனுபவிக்கின்றார்கள்.

அந்த பிள்ளையும் உயிர் வாழ துன்பப்படுகிறது. உத்தேச சட்டத்தின் மூலம் தாயின் வலியையும் தாய் சேய் படும் துன்பங்களையும் தடுக்க முடியும்" என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணரான டாக்டர் யு.டி.பி. ரத்னசிறி "இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்கனவே அரசியல் , மதம் மற்றும் சமூகம் சார்ந்த காரணங்கள் தடையாக உள்ள போதிலும் பல தாய்மார்களின் துன்பங்களைப் போக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் ஆகும். சகல தாய்மார்களுக்கும் தங்கள் வலி மற்றும் துன்பங்களை போக்கிக்கொள்ள உரிமை உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.