Header Ads



றிசாத்தை சாடும் ஹக்கீம், கூட்டமைப்பு என்ற பெயரில் SLMC யுடன் மோதப் பார்க்கின்றனர் என்கிறார்

எனது வவுனியா வருகைக்கு பயந்து, பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். காட்டுத்தர்பார் அரசியல் நடத்தினால்தான் தனக்கு அங்கிகாரம் கிடைக்குமென நம்பிக்கொண்டிருப்பவர்களின் பித்தலாட்டங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள சின்னப்பள்ளிக்குளம், கோவில்குளம் தமிழ் மகா வித்தியாலயம், மடுன்கந்தை சிங்கள மகா வித்தியாலயம், வவுனியா கல்வியியல் கல்லூரி, பட்டனிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் சாலம்பைக்குளம் போன்ற இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கிவைத்த பின்னர், ஆண்டியா புளியங்குளத்தில் நேற்றுப் புதன்கிழமை மாலை நடைபெற்;ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சருடன் தேவையில்லாமல் பிரச்சினைப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் வெளிநடப்பு செய்கின்ற அளவுக்கு பிரச்சினை ஏற்படுத்தவேண்டிய எந்த அவசியமும் அங்கு இருக்கவில்லை. வடக்கிலுள்ள தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதில் வரிந்துகட்டிக்கொண்டு செயற்படுகின்ற வேலைதான் இது. “வீண் வம்புக்கு அரசியல் செய்வது சிலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது. சண்டையை ஆரம்பிக்கும் நோக்கத்தில்தான் அவர்கள் வருகிறார்கள். ஏன், எதற்கு சண்டையை ஆரம்பிக்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது. சண்டையை கிளப்பி, மறுநாள் அது பத்திரிகையில் வரவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மோதுவது தனக்கு ஒரு தகுதி. அது தன்னை உயர்த்திவிடும், மக்கள் மத்தியில் பெரிய பிரபல்யத்தை கொண்டுவரும் என்று நினைக்கின்ற கேவலமான இந்த அரசியல் செயற்பாடு மிகவும் ஆபத்தானது. வடக்கில் தமிழ், முஸ்லிம்களிடையே சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், அதில் குளிர்காய்வதல்ல எமது நோக்கம். அதற்கு தீர்வுகாணவேண்டும். “இரு சமூகங்களிடையே தேவையில்லாமல் சங்கடங்களை ஏற்படுத்துகிறார்கள். நான் மக்களுக்காக போராடுபவன் என்ற பெயர் பத்திரிகையில் வரவேண்டும் என்பதற்காகத்தான் மாத்திரம்தான் இப்படியான கூத்துகளை நடக்கின்றன. ஆரம்பித்த பிரச்சினைகள் இன்னும் முடிவடையவில்லை.

“பாதுகாக்கப்பட்ட வில்பத்து காட்டை அரசியல்வாதிகள் அழிக்கிறார் என்ற விஷமத்தனமான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நாங்கள் தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றபோது, அவர்களுடைய கட்சிக்காரர்களை கொண்டுவந்து கூட்டம் நடத்தவிடாமல் குழப்புகின்ற வேலைகளை செய்தனர். யார் மூலமாகவாவது தீர்வு கிடைக்கட்டும் என்றில்லாமல், தங்கள் மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படியான வேலைகளை செய்கின்றனர்.

“சில்லறைத்தனமான, கேவலமான, அசிங்கமான ஒரு அரசியல் இந்த மண்ணில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் நடந்த விடயத்தில், தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு பங்கிடுவதற்கு தாராளமாக காணிகள் இருக்கின்றன. ஆனால், கூட்டத்தில் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். வடக்கு முதலமைச்சர் கடும்போக்காளர் என்று தெற்கில் கதை பரவுகின்ற நிலையில், முதலமைச்சர் வெளிநடப்பு செய்கிறார் என்பதை போட்டுக்கொடுப்பதற்கும், உரிமைக்காக போராடுபவராகவும் தம்மை காட்ட முயல்கின்றனர். “பக்குவமில்லால் ஆரவார அரசியல் செய்து பழகிய இவர்கள், மக்கள் உரிமைக்காக போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள். இப்படியான அரசியல் செய்யவேண்டிய தேவை எங்களுக்கு கிடையாது. சாணக்கியமாக, சகோதர தமிழ் சமூகத்தையும் அரவணைத்துக்கொண்டு நாங்கள் செல்கிறோம்.

“நியாயங்களை பேசவேண்டிய இடங்களில் பேசவேண்டும். காட்டுதர்பார் நடத்துவதுபோல கூட்டம் நடத்தமுடியாது. அப்படி நடத்துவதால்தான் தனக்கு அங்கிகாரம் கிடைக்குமென்று நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பித்தலாட்டங்களை மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. கேவலமான இந்த கலாசாரத்துக்கு முடிவுகட்டப்பட வேண்டும்.

“மாங்குளம் பகுதியிலுள்ள சிட்டுக்குளம் பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. அபிவிருத்திகளை மக்களிடம் கையளிக்கிறோம், அதன்போது அவர்களுடன் பேசுகிறோம். சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்கிறோம். அதனைத் தடுப்பதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகள் மிகவும் அசிங்கமானது. அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் தனிக்காட்டு தர்பார் நடத்தவேண்டாம்.

“கட்சியிலிருந்து பிரிந்துசென்ற சிலருக்கு அரசியல் பிழைப்புக்காக முகாம்களை தேடிக்கொண்டிருந்தனர். அவர்களை சேர்த்துக்கொண்டு கூட்டமைப்பு என்ற பெயரில் முஸ்லிம் காங்கிரஸுடன் மோதலாம் என்று பார்க்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்தாலும் இந்த சாம்ராஜ்யதுக்கு ஒருபோதும் சவால்விட முடியாது என்றார்.

No comments

Powered by Blogger.