July 01, 2017

யாழ்ப்பாணத்தில் JMA - UK ஏற்பாட்டில், மிகப்பெரும் ஒன்றுகூடல்

 بسْــــــــمِ ﷲِ الرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ 
السلام عليكم ورحمة الله وبركاته

பாசமிகு சொந்தங்களே! யாழ் உறவுகளே!

சரியாக இருபத்தியேழு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் யாழ்த்தாய் பெற்ற பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக தாய்வீடு செல்ல இருக்கிறோம்.

அவனியெங்கும் சிதறுண்டு பிரிந்து வாழ்வதே விதியாகிப் போனாலும்,  கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் எமது அன்னையை ஒரு கணப்பொழுதும் நாம் மறந்து வாழ்ந்ததில்லை. அவளைப் பிரிந்த துயரம், வேதனைத் தீயில் எம்மை வாட்டி வதைக்காமல் விட்டதில்லை. இன்று இறைவனின் அருள்மழை பொழியத் தொடங்கியுள்ளது. எமது தாய் மீண்டும் எமக்கு கிடைத்துள்ளாள்.

அவள் தண்நிழலில் அமர்ந்து, அன்னை கையால் அருசுவை உணவருந்தி, அன்பொழுக அவளோடு பேசி, மனம் மயங்கும் தாலாட்டுக் கேட்டு, தாய்மடியில் கண்வளரும், அற்புத வாய்ப்பொன்று எமக்காக அமைய இருக்கிறது.

இந்த வருடத்தின் (2017) ஆவனிமாதத் தொடக்கத்தில்(01-07/August 2017), அவனியெங்கும் பரந்து, பிரிந்து வாழும் யாழ்த்தாயின் பிள்ளைகள் அனைவரும், யாழ்ப்பாணத்தில், தாய்மடியில் ஒன்றுசேர வெகு விமர்சையான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒன்றுகூடலிலே, ஆண்கள், பெண்கள், இளையவர்கள், முதியவர்கள், இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமியர், என அனைவருக்குமான நிகழ்ச்சிகள் பல நடைபெற உள்ளன.

பாரம்பரிய, நவீன, வீர விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள்,  இன்னும் எமது ஊரையும், ஊர்மக்களின் ஒற்றுமையையும் கட்டியெழுப்பிப் பராமரிப்பதற்கான கருத்தரங்குகள், மண்வாசனை கமழும் விருந்துபசாரங்கள், சிறப்புப் பேச்சுக்கள் என பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடாத்த இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்! 

இந்த ஒன்றுகூடலும், அங்கே நடைபெற இருக்கும் நிகழ்வுகளும், யாழ் முஸ்லிம் மக்களின் சமூக வாழ்விலே ஒரு புத்தெழுச்சியையும், புதுப்பொழிவையும் ஏற்படுத்துமென நம்புகிறோம்.

எமது மக்களின் மீள் குடியேற்றத்திலும், எமது சமூகத்தின் மீள் உருவாக்கத்திலும் இந்த ஒன்றுகூடல் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைய இருக்கிறது.

பாசமிகு தொப்புள்கொடி உறவுகளே!

எல்லோரும் எமது தாய்மண்ணில், யாழ்மண்ணில் அணிதிரள்வோம்! 
எதிர்வரும் கோடைகால விடுமுறையை, எம் இனத்தவரின் வசந்தகால விடுமுறையாக மாற்றி அமைப்போம்! வெறும் பார்வையாளர்களாக அல்ல,
பாசமிகு பங்காளிகளாகக் கலந்து சிறப்பிக்க வருமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.!

இந்த நிகழ்ச்சிகளின் பிரதான ஒருங்கிணைப்பாளர்களாக JMA-UK அர்ப்பணிப்புகளோடு செயற்பட்டாலும், எமது சமூகம் சார்ந்த சகோதர அமைப்புகள் சகலரினதும் ஒத்துழைப்போடும், உறுதுணையோடும் இந்த ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறோம்.

இதை யாழ் முஸ்லிம் மக்களின் குடும்ப நிகழ்ச்சியாக வடிவமைத்து மகிழ விரும்புகிறோம். ஆதலினால் உறவுகள் அனைவரும் தாமாகவே முன்வந்து எம்மை தொடர்பு கொள்ளுமாறு உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்!
தொடர்புகளுக்கு...

பிரதான ஒருங்கிணைப்பாளர்கள்.

UK:- Jawsad- -00447846150831
UK:- Gias 00447878974044
SL:- Kais-
-0094714002679
EM:-jmauk@ymail.com
Fb:-jaffnamuslimassociationuk
WS:-jaffnamuslimuk.org

வஸ்ஸலாம்!

0 கருத்துரைகள்:

Post a Comment