Header Ads



இஸ்லாமியவாத தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் சவுதி - பிரிட்டன் குற்றச்சாட்டு

பிரிட்டனில் இஸ்லாமியவாத தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் தலைமை நிலையில் செளதி அரேபியா உள்ளது என்று புதிய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி மற்றும் இஸ்லாமியவாத நிறுவனங்கள், வெறுக்கத்தக்க பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் ஜிஹாதி குழுக்கள் இடையே ஒரு தெளிவான மற்றும் வளரும் தொடர்பு இருப்பதாக ஹென்றி ஜாக்சன் சொஸைட்டி என்ற ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆய்வுக் கழகம் , செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளின் பங்கு குறித்து பொது விசாரணை ஒன்றை அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால், இது வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி பொய்யானவை என்று பிரிட்டனுக்கான செளதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனை மையமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமியவாதக் குழுக்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டிய அழுத்தத்தில் அமைச்சர்கள் தற்போது உள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரனால் உத்தரவிடப்பட்டு, ஜிஹாதி குழுக்களின் இருப்பு மற்றும் செல்வாக்கு குறித்து உள்துறை அலுவலகம் அறிக்கை ஒன்றை தயாரிக்க ஆரம்பித்தது. அது இன்னும் முடிவடையாத நிலையில், அது வெளியிடப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த அறிக்கை அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். காரணம், வளைகுடா நாடுகளுடன் குறிப்பாக செளதி அரேபியாவுடன் நெருங்கிய மற்றும் நீண்ட ராஜிய ரீதியிலான, பாதுகாப்பு மற்றும் பொருளாதார தொடர்புகளை பிரிட்டன் கொண்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ள அறிக்கையின்படி, இரான் மற்றும் பல வளைகுடா நாடுகள், பிரிட்டனில் உள்ள மசூதிகளுக்கும் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்கியதாகவும், அவை தீவிரவாத பிரசாரங்களை மேற்கொள்பவர்களுக்கு புகலிடமாகவும் மற்றும் தீவிரவாத விஷயங்கள் பரவ காரணமாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

இந்தப் பட்டியலில் முதன்மையாக, செளதி அரேபியாதான் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. ''ஒரு தாராள மனப்பான்மையற்ற, காழ்ப்புணர்ச்சி கொண்ட வஹாபி சித்தாந்தம்'' என்று அந்த அறிக்கை வர்ணிக்கும் கொள்கைகளை சௌதி அரேபியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதாக குற்றஞ்சாட்டுகிறது.

செளதியிலிருந்து நிதி ஆதாரத்தை பெற்று பிரிட்டனில் இயங்கும் நிறுவனங்கள் செளதி அரேபியாவிலிருந்து நேரடியாக இயக்கப்படுவதாக அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், பல சந்தர்ப்பங்களில் இந்த நிதி வெறும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் செல்வாக்கைப் பெறுவது போன்ற ஒரு தோற்றத்தை கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.