Header Ads



புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை, நாங்கள் மன்னித்துவிட்டோம் - ரிஷாட்


அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவிகளை அடைய வேண்டுமெ ன்பதற்காகவும் தமிழ்  - முஸ்லிம் உறவு மேலோங்கவேண்டுமென்ற மனோபாவம் மாற்றப்பட்டு, இரண்டு சமூகங்களினதும் அடிநாதப்பிரச்சினைகளைத் தீர்க்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இனநல்லுறவு வழிசமைக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 
அம்பாறைமாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்;. சலீமின் 50வருட சேவையை பாராட்டும் விழாவும், 'பொன்விழா காணும் சலீம்'  எனும் நூல் வெளியீடும் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். 

 கௌரவ அதிதிகளாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசனலி, முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முழக்கம் அப்துல்மஜீத், மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஜெமீல்,  மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான அப்துல் மஜீத், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், அட்டாளைசேனை முன்னாள் தவிசாளர் அன்சில், நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹீர், உட்பட நீதிபதிகள்,புத்திஜீவிகள் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் எனப் பல்த்துறை சார்ந்தோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.இங்கு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, 

முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினார்கள். அதை நாங்கள் மன்னித்துவிட்டோம், மறந்துவிட்டோம். 25வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த கறைபடிந்த நிகழ்வு ஒரு செய்தியாக இப்போது போய்விட்டது. எனினும் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் பொறுப்பும் கடமையும் தற்போது வடமாகாணத்தில் ஆட்சியிலுள்ள மாகாண சபைக்கு இருக்கின்றது. மீள்குடியேற்றத்திற்கு இந்த மாகாணசபை உதவும் போது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கிடையே நிலவுகின்ற சின்னச்சின்னப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஒற்றுமையாக வாழ்கின்ற நல்ல சூழல் ஒன்று உருவாகக்கூடிய வாய்ப்பு உண்டு. அந்தக் குடியேற்றத்துடன் சேர்ந்த ஓர் சமூக இணைப்பு பாலத்தையும் உருவாக்க முடியும். ஆனால் வடமாகாண சபை அதனை தட்டிக்கழிக்கின்றது. 

கடந்த வாரம் யாழ்ப்பாணக் கச்சேரியில் அரசாங்க அதிபரின் தலைமையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். முதமைச்சர் விக்னேஸ்வரன் இந்தக் கூட்டம் தொடர்பில் யாழ் அரச அதிபரிடம் இப்போது விளக்கக்; கடிதம் கோரியிருப்பதாக அறிகின்றோம். அதே போன்று மன்னாரில் மயான பூமியொன்று நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒரு தனிநபருக்கு சொந்தமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு சமூகங்களுக்குமிடையே பெரிய மோதல் ஒன்று உருவாகும் நிலைமை அங்கு ஏற்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதற்கு எண்ணெய் ஊற்றியிருக்கிறார். அதே வேளை அதே கட்சியின் இன்னுமொரு மாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரன்இந்த விடயத்தை சமரசம் செய்யும் முயற்சியில் என்னுடன் இணைந்து நேர்மையாக செயற்பட்டமை பாராட்டப்பட வேண்டியது. சின்னஞ்சிறிய விடயங்கள் தான் எங்களுக்குள் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றது. வடக்கு கிழக்கிலே முஸ்லிம்கள், மூன்றில் ஒரு பகுதியினராக வாழ்கின்ற போதும் அதற்கு வெளியே மூன்றில் இரண்டு பகுதியினர் சிதறி வாழ்கின்றனர். 

மிகவும் நேர்மையாக நாங்கள் தமிழ் மக்களின் விடயத்திலே நடந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் முஸ்லிம்களின் விடயத்திலே ஏனோ இத்தனை சவால்களை எதிர்நோக்க வேண்டி இருக்கின்றது. அமைச்சர் ரிஷாட் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது, முஸ்லிம் மக்களை ஏன் குடிNயுற்றவில்லை? என்று தமிழரசுக் கட்சியின் மாகாண சபை அமைச்சர் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டிருந்தார். முஸ்லிம் அமைச்சர்  ஒருவர், அந்த வேளையில் அவ்வாறு நடந்து இருந்தால் நான் எவ்வாறு விமர்சிக்கப்பட்டிருப்பேன் என்பதை சிந்தித்துப்பாருங்கள். 42ஆயிரம் தமிழ்க்  குடும்பங்களை நான் முல்லைத் தீவு மாவட்டத்தில் குடியேற்றியிருக்கின்றேன். 15ஆயிரம் கல்வீடுகளை மாகாண சபை நிர்வாகம் வருவதற்கு முன்னர் அங்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். ஆனால் முல்லைத்தீவில் 900முஸ்லிம் குடும்பங்களை குடியேற்ற நினைக்கும் போது நாங்கள் படுகின்றபாடு போதுமென்றாகிவிட்டது.  எமது மார்க்கம் முஸ்லிம்களுக்கு மட்டுமே உதவி செய்ய வேண்டுமென்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. எங்களிடம் நியாயம் இருக்கின்றது. மனிதர்களுக்கு மேற்கொள்ளும் உதவிகளை ஒரு பேறாகவே இஸ்லாம் கருதுகின்றது. 

எனவே, பெரும்பான்மைக் கட்சிகள் சேர்ந்து சிறுபான்மை மக்களுக்கு தேர்தல் முறை மாற்றத்தில் இழைக்கப் போகும், சதி முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒருபோதும் துணை போகக்கூடாது என்பதை இந்த இடத்தில் அன்பாய் வேண்டுகின்றேன்.

தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம், பெருந்தலைவர் அஷ்ரப் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. தமிழ்த் தலைவர்களாக, பெருந்தலைவர்களாக சம்பந்தன், மாவை போன்றவர்கள் உயிருடன் வாழும் இந்தக் காலம் பொன்னானது. நீங்கள் இருவரும் நீடுழி வாழ வேண்டும். உங்களைப் போன்ற தலைவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கின்றோம். நமது சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட ஒரு கூட்டம் செயற்படுகின்றது. வெளிநாட்டு சக்திகள் இதற்காகப் பணத்தை வாரிவழங்கிக் கொண்டு இருக்கின்றன. எனவே நாங்கள் இதய சுத்தியோடு பேசுவோம், மனந்திறந்து பேசுவோம். மக்களுக்காகப் பேசுவோம், மக்களின் எதிர்காலத்திற்காக பேசுவோம், எல்லோரும் நமது சகோதரர்களே என்ற வாஞ்சையோடு பேசுவோம். இதனை விடுத்து 56ம் ஆண்டு ஒப்பந்தம், 72ம் ஆண்டு ஒப்பந்தம், மர்ஹும் அஷ்ரப்புடன் ஒப்பந்தம், ஹக்கீமுடன் ஒப்பந்தம் என்று சொல்லிச் சொல்லிக் கொண்டே இருப்பதில்  எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. இன்று இருக்கும் நிலையில் இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு நாம் முன்னெடுத்துச் சென்றால் வெற்றி பெறமுடியும் என்பதைப் பற்றி ஆராய்வோம், அமர்ந்து பேசுவோம். தீர்வு காண்போம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இரண்டு சமூகங்களின் வெற்றிக்காகவும் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றது என்பதை உறுதியுடனும், கௌரவத்துடனும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் கூறினார்.

No comments

Powered by Blogger.