Header Ads



"நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஒரு திறந்த கட்சி - அதில் அனைவரும் இணையமுடியும்"


தேர்தல் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டமை குறித்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று (11.07.2017) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

2006 இல் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் கடந்த 11 வருடங்களாக, ஆரம்பத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) எனவும், பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) எனவும்  இயங்கி வரும் கட்சியின் வரலாற்றில் இது முக்கியமானஅடைவு என தவிசாளர் அப்துர் ரஹ்மான் சுட்டிக் காட்டினார். 

இதன்போது கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த, தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு மனமார்ந்த நன்றியறிதல்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்.

தற்போது முஸ்லிம் மக்களின் ஆதரவுத் தளத்தை அதிகளவில் கொண்டிருந்தாலும், எல்லா சமூகங்களின் நலனுக்காகவும் இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி கட்சி செயற்படும் எனவும், பொது நன்மைக்காக தொடர்ந்தும் இயங்கும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கான ஆணையை மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர். ஆகவே எவ்வித அழுத்தங்களுக்கும் பலியாகாமல், மக்களது ஆணைக்கு மதிப்பளித்து எல்லா மக்களுக்கும் இணக்கமான அரசியலமைப்பைக் கொண்டுவர அரசாங்கம் உளப்பூர்வமாக செயற்பட வேண்டும் என பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் இதன்போது வலியுறுத்திப் பேசினார். 

குறிப்பாக தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்கின்றபோது சிறுபான்மை மக்களதும், சிறிய கட்சிகளினதும் எதிர்பார்ப்புகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் சட்டம், ஒழுங்கு முறையாகப் பேணப்பட வேண்டும். சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இனவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வெறுப்பூட்டும் பேச்சுக்களினூடாக நாட்டில் கொதிநிலையையும் குழப்பத்தையும் தூண்டுவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள்  தண்டிக்கப்பட வேண்டும். அரசாங்கமும் பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிசாரும் இதில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் கருத்துரைத்தார்.

எதிரே வரப் போகின்ற மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தமது கட்சி போட்டியிடும் எனவும், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஒரு திறந்த கட்சி எனவும், அதில் அனைவரும் இணைந்து கொள்ள முடியும் எனவும் கருத்துரைக்கப்பட்டது. கட்சியில் இணைந்து கொள்ளுமாறு பொது அழைப்பும் விடுக்கப்பட்டது. 

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ஸஃப்ரி அப்துல் வாஹித் ஆகியோரும் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.