July 20, 2017

தமிழ் பாடசாலையில், முஸ்லிம்கள் குடியேறவில்லை - இனமுறுகலை ஏற்படுத்த சுமணரத்ன தீவிரம்

-ஜுனைட் நளீமி-

மட்டக்களப்பு மீராவோடை சக்தி வித்தியாலய விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்கான காணிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மங்கலராமாய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பாடசாலைக்காணியை அத்துமீறி பிடித்துள்ளதாகவும், மாவட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகள் இனரீதியாக செயற்படுவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். 

குறித்த காணி தொடர்பில் எவ்வித பின்னணியும் இன்றி முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தி தமிழ் சகோதர இனத்துடன் முறுகல் நிலையை தோற்றுவிப்பதாகவே அவரது கருத்து அமைந்திருந்தது. குறித்த காணியில் 1950களிலேயே முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது பதுரியா என அழைக்கப்படும் இப்பிரதேசம் கொண்டயன்கேணி தோட்டம் என அப்போது அழைக்கப்பட்டது. தற்போது பாடசாலை காணி அமைந்திருக்கும் காணி தனியார் குடியிருப்பு காணியாகவே அமைந்திருந்தது. முஸ்லீம் நபருக்கே அக்காணி சொந்தமாக இருந்ததுடன் பின்னர் ஒரு தமிழ் சகோதரருக்கு அக்காணி இனாமாக வழங்கப்பட்டிருக்கின்றதனை அறிய முடிகின்றது. குறித்த தமிழ் சகோதரர் பிற்காலத்தில் பாடசாலை அமைக்க அக்காணியை வழங்கியும் உள்ளார். பாடசாலையை சுற்றியுள்ள அனைத்து நிலங்களும் முஸ்லிம்களுக்கே சொந்தமாக உள்ளமையே இதற்கு சான்றுபகிர போதுமாகும். 

பாடசாலையின் தென்புறம் அமைந்துள்ள வீதி 1952களில் தமிழ் முஸ்லீம் பிரதேசங்களை பிரிக்க போடப்பட்ட எல்லைக்கோடுகளாக அமைந்திருந்தது என கூறுகிறார் பாடசாலை அருகில் குடியிருக்கும் அச்சுமுஹம்மது மீராலெப்பை ( வயது 65) 

'எனது தந்தை கிண்ணையடி பகுதியில் காடுவெட்டி குடியிருக்க முற்பட்டபோது அப்போதைய தமிழ் பகுதி விதானையார் இங்கு குடியிருக்க முடியாது இது தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். உங்கள் விதானையாருடன் பேசி உங்களுக்கு எல்லை காட்டுகிறேன் என குறிப்பிட்டார். பின்னர் நான் எமது முஸ்லீம் பகுதி விதானையாரான ஈசாலெப்பை அவர்களுடன் கதைத்து இரண்டு விதானைகளும் பேசி இந்த வீதியை எல்லை இட்டதுடன் முஸ்லிம்கள் எல்லைக்கு அப்பால் வரவேண்டாம் எனவும் குறிப்பிட்டனர். அதன் பின்னரே நாங்கள் பாடசாலை மைதானக்காணி என இவர்கள் கோரும் இக்காணியில் 1952முதல் வசித்து வந்தோம்' என அவர் குறிப்பிடுகிறர்ர். குறித்த இனங்களுக்கிடையிலான எல்லைப்பிரிகோடு துரதிஸ்ட்ட வசமாக தொடர்ந்தும் இந்திய பாகிஸ்தான் பிரிகோடுபோன்று அவ்வப்போது இன முருகளை தோற்றுவித்து வந்துள்ளது என்பது கசப்பான அனுபவம். இந்த எல்லை நிர்ணயத்தில் தமிழ் தரப்பிலிருந்து அருணா இல்லம், மேகநாதன் ஐயர் ஆகியோரும் ஈசாலெப்பை விதானையார், சாவல் வட்டாவிதானையார், மரைக்கார் போடியார் என அழைக்கப்படும் மீராலெப்பை என்பவரும் கலந்துகொண்டதாக மீராலெப்பை கருத்து தெரிவித்தார்.

மேகநாதன், சண்முகம், ராஜலிங்கம் பரிகாரி போன்றோர் வீதியின் மருபுறத்திலும், கொஸத்தாப்பா, கண்டியன் நானா, மம்மலி ஹாஜியார், சாவல் வட்டாவிதானை யாசின் பாவா போன்றோர் இப்பகுதியில் குடி இருந்ததாக குறிப்பிடும் அச்சுமுஹம்மது பாத்தும்மா (வயது77) டீ.எஸ்.சேனநாயக்க காலத்தில் பெரிய வீடுகளும், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி கிணறும் அமைத்து தந்ததாக குறிப்பிடுவதுடன், 1985ம் ஆண்டு மாணிக்கராசா வன்செயலில் தமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் எஞ்சிய எச்சங்கள் இந்திய இராணுவம் தமது வீடு இருந்த பகுதியில் முகாமிட்டு இருந்ததுடன் எல்லா வீடுகளையும் அளித்து விட்டதாக கண்ணீருடன் குறிப்பிடுகின்றார். 

0 கருத்துரைகள்:

Post a Comment