July 14, 2017

மூளைச்சாவு அடைந்த நிலையிலும், இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த அதிசயப் பெண்!


பிரேசிலில் மூளைச்சாவு அடைந்ததாகக் அறிவிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்து அதிசயம் நிகழ்த்தி இருக்கிறார். இந்த அதிசயம் அவரது உறவினர்கள் மற்றும் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் திறமை மிக்க மருத்துவர்களால் சாத்தியப்பட்டிருக்கிறது. பிரேசில், கண்டெண்டா பகுதியைச் சேர்ந்த 21 வயது ஜம்போலி படில்ஹா, தான் 9 வார கர்ப்பமாக இருக்கையில் மூளைச்சாவு அடைந்து விட்டாரென மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.

ஜம்போலி தான் கருவுற்ற 9 வது வாரத்தில், திடீரென தனக்கு கழுத்து மற்றும் தலைப்பகுதியில் தாங்க முடியாத வலி இருப்பதாகத் தன் கணவரிடம் கூறவே, கணவர் முரியல் படில்ஹோ அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அழைத்துச் செல்லும் வழியிலேயே ஜம்போலிக்கு நினைவு தப்பி விட்டது. அங்கே மருத்துவமனையிலோ, ஜம்போலிக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்து அதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து சரியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தவறியதால் இப்போது அவர் மூளைச்சாவு அடைந்து விட்டார் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதிர வைத்த  வைத்த இந்த அறிவிப்பு கண்டு திகைத்துப் போனார் முரியல். அந்த நிமிடத்தில், முரியலை,  இறந்து கொண்டிருக்கும் தன் மனைவி குறித்து வருத்தப் படுவதா? அல்லது மனைவியின் வயிற்றுக்குள் இப்போதும் உயிருடன் இருக்கும் தனது இரட்டைக் குழந்தைகளின் அபாயகரமான நிலை குறித்து கவலைப்படுவதா? என்ற பதில் தெரியாத கேள்விகள் குடைந்தெடுக்க; மருத்துவர்களோ; தாய் மூளைச்சாவு அடைந்த நிலையில் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைகளை மிஞ்சிப் போனால் இன்னும் 3 நாட்களுக்கு வேண்டுமானால் உயிரோடு வைத்துக் கொள்ளப் போராடலாம். பிறகு எல்லாம் கடவுள் செயல் என்றிருக்கிறார்கள். எப்போது கருவிலிருக்கும் குழந்தைகள் தங்களது இதயத் துடிப்பை நிறுத்திக் கொள்கின்றனவோ, அப்போது முரியல் தன் மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிக் காரியங்கள் செய்யலாம் என மருத்துவர்கள் கூறியதாக முரியல் தன் வலி மிகுந்த நிமிடங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் முரியலின் வலியை கடவுள் உணர்ந்திருப்பாரோ என்னவோ! வெறும் மூன்று நாட்களில் முடிந்து விடும் என நினைத்த அந்த இரட்டைக் கருக்களில் இதயத் துடிப்பும், உடலியக்கங்கள் மற்றும் வளர்ச்சிகள் தொடர்ந்து 123 நாட்கள் அந்த மருத்துவமனையின் ICU வார்டில் ஆரோக்யமாக நீடித்திருக்கிறது. அங்கிருந்த மருத்துவமனைச் செவிலிகள் மிகுந்த மனநிறைவுடன் தெரிவித்த விவரம் என்னவெனில்; “தாய் மூளைச்சாவு அடைந்த நிலையில் கருவில் தங்களது உயிர்போராட்டத்தில் வென்று இந்த உலகை வெற்றிகரமாகக் காணத் துடித்துக் கொண்டிருந்த அந்த இரு பச்சிளம் குழந்தைகளையும் தாயின் கருவறையினுள் இருந்த காலத்திலிருந்தே நாங்கள் வரவேற்கத் தொடங்கி இருந்தோம். அவர்களுக்காக நாங்கள் எங்கள் ஐசியு வார்டு அறையைப் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி, வாழ வேண்டும் எனும் தீரா ஆர்வம் உள்ளிட்ட விசயங்களால் அழகு படுத்தத் தொடங்கினோம். தினம்தோறும் தாயின் கருவறையில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஆரோக்யமாக வளர்ந்து கொண்டிருந்த அந்த இரு கருக்களிடம் ‘உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம், நீங்கள் மிக மிகப் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறீர்கள்’ என்ற வாசகங்களைச் சொல்லிச், சொல்லி அந்தக் குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டத் தொடங்கினோம். அவர்களது குடும்பத்தினரும் குழந்தைகள் கருவில் உயிருடன் இருக்கும் வரையில் தாய்க்கான உயிர் காக்கும் கருவிகளை நீக்கக் கூடாது என்று தெளிவாகவும், நம்பிக்கையுடனும் கூறி விட்டதால் இந்த அதிசயம் இப்போது சாத்தியப் பட்டிருக்கிறது.” என்கிறார்கள்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் முழு வளர்ச்சி அடைந்த இந்த இரட்டைக் குழந்தைகளைத் தாயின் கருவறையில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியுலகம் காணச் செய்த தெற்கு பிரேசிலின், நோஸா செனோரா டோ ரோஸியோ மருத்துவமனையின் மருத்துவர்கள், அந்த இரு குழந்தைகளையும் தொடர்ந்து மூன்று மாதங்கள் இன்குபேட்டரில் வைத்து தொடர் கண்காணிப்பில் வைத்திருந்திருக்கின்றனர். தற்போது அந்தக் குழந்தைகளுக்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படாது என்ற நிலையில் குழந்தைகள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள நிலையில் ஜம்போலியாவின் தாயார்; தனது மகளது மரணம் மிகுந்த துக்கத்தை தந்தாலும், அவர் தன் வாழ்வின் இறுதிப் பகுதியை எட்டி விட்ட நொடியிலும் கூட, தன் விதியோடு எதிர்த்துப் போராடி, கருவிலிருந்து தனது இரட்டைக் குழந்தைகளுக்கு வாழ்வை மீட்டுத் தரும் மன உறுதியோடு இருந்தமை கண்டு தான் மிகவும் பெருமைப் படுவதாகவும், தன் வாழ்வின் கடைசி நொடி வரை போராடியதால் இப்போது தன் மகள் ஒரு மிகச் சிறந்த வீரங்கனை எனச் சொல்லிக் கொள்வதில் தான் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். 

குழந்தைகள் பிறந்த பின் ஜம்போலியாவின் உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் அதே மருத்துவமனையில் இருந்த இரு நோயாளிகளின் உயிரைக் காக்க தானமாக அளிக்கப் பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment