Header Ads



"இது போன்ற புகைப்படங்களை, வாழ்நாளில் ஒருமுறையே பார்க்கமுடியும்"


இந்த சிறுத்தைக் குட்டியால் தன் உடலில் உள்ள புள்ளிகளை மாற்ற முடியாது. ஆனால் இந்த பெண் சிங்கத்தி்ற்கு அதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. இந்த அற்புதமான புகைப்படங்கள், வேறு இனத்தைச் சேர்ந்த உயிரினத்திற்கு பெண் சிங்கம் ஒன்று பாலூட்டும் போது எடுக்கப்பட்டதாகும். இது அரிதிலும்,அரிதான நிகழ்வு.

`இது போன்ற புகைப்படங்களை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் ` என சிங்கங்கள் குறித்த நிபுணரான லூக் ஹண்டர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தான்சானியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதியான கோரோன்கோரோ-வில் உள்ள டுடூ சஃபாரி விடுதியில் தங்கியிருந்த ஜுப் வான் டெர் லிண்டே என்பவர் இந்த காட்சியை பார்த்துள்ளார். இந்த நிகழ்வு நடைபெற்றுள்ள இடம் செரன்கெடி. சிறுத்தைக் குட்டிக்கு கவனமாக பாலூட்டும் தாய் சிங்கத்தின் பெயர் ஐந்து வயதான நாசிகிடோக். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொண்டு நிறுவனமான `கோப் லைன்` அமைப்பினால் பொறுத்தப்பட்ட ஜி.பி.எஸ் பட்டையை அணிந்திருக்கும் இந்த பெண் சிங்கம், கடந்த ஜுன் 27-28 தேதிகளில் 3 சிங்கக் குட்டிகளை ஈன்றது.

கோப் லைன் அமைப்பிற்கு ஆதரவளித்து வரும் சிங்கங்களை பாதுகாக்கும் உலகளாவிய அமைப்பான பந்தேரா அமைப்பின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான லூக் ஹண்டர், இந்த சம்பவம் `உண்மையிலே தனித்துவமானது` என தெரிவிக்கிறார். `இது சகஜமான ஒன்று அல்ல. இரண்டு பெரிய பூனை இனங்களுக்கிடையே இப்படி முன்னெப்போதும் நடந்ததில்லை என எனக்கு நன்றாக தெரியும்.` என அவர் கூறுகிறார். `தனக்கு பிறக்காத வேறு சிங்கக் குட்டிகளை, பெண் சிங்கங்கள் தத்தெடுத்துக் கொண்ட சம்பவங்கள் உண்டு. ஆனால் இது முன்னெப்போதும் நடக்காதது.`

பொதுவாக உணவுச் சங்கிலியில் தங்களுக்கு போட்டியாக இருக்கும் சிறுத்தை போன்ற மற்ற வேட்டை மிருகங்களின் குட்டிகளை பார்த்தால் பெரும்பாலான பெண் சிங்கங்கள் அவற்றை கொன்றுவிடும். பாலினம் கண்டறியப்படாத இந்த சிறுத்தைக் குட்டி பிறந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகியிருக்கலாம். `நல்லவேளையாக சிறுத்தைக் குட்டியை அந்த பெண் சிங்கம் கொல்லவில்லை `என ஹண்டர் கூறுகிறார்.

அந்த சிறுத்தைக் குட்டியை போன்று இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வயதுள்ள குட்டிகள் நாசிகிடோக்கிற்கு உள்ளன. தனது குட்டிகளை மறைத்து வைத்துள்ள, தன் இருப்பிடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்தான் அந்த பெண் சிங்கம் சிறுத்தைக் குட்டிக்கு பாலூட்டிக் கொண்டிருந்த நிகழ்வு நடந்துள்ளது.

`அவள் சிறுத்தைக் குட்டியை எதிர் கொண்டது மட்டுமல்லாமல், தனது குட்டியைப் போலவே அதனை பார்த்துக் கொண்டாள். தாய்மைக்கான ஹார்மோன்களை அவள் பெருமளவு கொண்டிருக்கிறாள்.மேலும் இதே போன்ற கடுமையான,அதே சமயம் பாதுகாப்பான செயல்பாட்டை அனைத்து பெண் சிங்கங்களும் கொண்டிருக்கின்றன. அவை வல்லமைமிக்க தாய்கள்.` என அந்த சிங்கங்கள் குறித்த வல்லுநர் குறிப்பிடுகிறார். அந்த சிறுத்தைக் குட்டியின் தாய் எங்கு இருக்கிறது அல்லது இந்த பெண் சிங்கம் அந்த குட்டியை முழு நேரமாக தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறதா என்பது இப்போது வரை தெளிவாக தெரியவில்லை.

உள்ளூர் சுற்றுலா விடுதியினர் அந்த பகுதியில் குட்டிகள் இருக்கக் கூடிய சிறுத்தை ஒன்று வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். தற்பெருமை பேசுவதற்காக நாசிகிடோக் இந்த செயலை செய்யவில்லை என்றாலும், அந்த சிறுத்தைக் குட்டி தனது தாயிடம் சேர்வதே சிறப்பானதாக இருக்கும்.

`கூடாரங்களில் தங்கியுள்ள எங்களது அணியினர் அடுத்து என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பார்கள்` என டாக்டர் ஹண்டர் தெரிவித்துள்ளார். ` இது ஒரு தனித்துவமான சம்பவம். இது எப்படி நடந்தது என்பதை அறிவது உற்சாகமூட்டக் கூடியதாக இருக்கும். இயற்கை கணிக்க முடியாதது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், `இதெல்லாம் கண்டிப்பாக நடக்காது` என கூறினோம். ஆனால் தற்போது அது நடந்துள்ளது.!` என ஹண்டர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.