July 28, 2017

அல் - அக்ஸாவில் இஸ்ரேலின் பாதுகாப்பு கெடுபிடிகள் வாபஸ், வரலாற்று வெற்றி என்கிறது ஹமாஸ்

பலஸ்தீனர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய ஜெரூசலம் புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் கொண்டுவரப்பட்ட புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் இஸ்ரேல் அகற்றிக்கொண்டுள்ளது. இதனை அடுத்து பள்ளிவாசலுக்கு வெளியில் திரண்ட ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் நேற்று அதிகாலையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒருவாரத்திற்கு மேல் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைய அல் அக்ஸா நிர்வாகம் முஸ்லிம் வழிபாட்டாளர்களுக்கு அழைப்ப விடுத்துள்ளது.

அல் அக்ஸா வளாகத்தின் நுழைவாயில்களில் இஸ்ரேல் புதிதாக அமைத்த தடுப்புகள், கம்பி வேலிகள் மற்றும் கண்காணிப்பு கெமராக்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் அகற்றினர்.

கடந்த ஜுலை 14 ஆம் திகதி இரு இஸ்ரேலிய பொலிஸார் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்தே அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் புதிய பாதுகாப்பு கெடுபிடிகளை அறிமுகம் செய்தது. எனினும் இந்த நடவடிக்கை கடந்த 10 தினங்களுக்கு மேலாக பலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டத்தை தூண்டியது.

இஸ்ரேலின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைய மறுத்த முஸ்லிம் வழிபாட்டாளர்கள் வெளியில் வீதிகளில் தொழுகையை நடத்தி வந்தது இஸ்ரேலிய படையுடன் அடிக்கடி மோதலை ஏற்படுத்தியது.

அல் அக்ஸா மீதான பாதுகாப்பு கெடுபிடிகளை அந்த வளாகத்தில் இஸ்ரேல் முஸ்லிம்களின் அந்தஸ்த்தை குறைக்கும் முயற்சி என பலஸ்தீனர்கள் கருதுகின்றனர். அல் அக்ஸா வளாகத்தை டெம்பிள் மெளண்டன் என்று அழைக்கும் யூதர்கள் அங்கு தமது பண்டைய கோவில்கள் இருந்ததாக நம்புகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து வாபஸ் பெற்றதை அடுத்து பலஸ்தீனம் எங்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

“அல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதை தவிர கடந்த 12 நாட்களாக ஒருவரும் உறங்க அல்லது வேறு எந்த வேலையையும் செய்யவில்லை” என்று கொண்டாட்டத்தில் ஈடுபடும் பலஸ்தீனர் ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் இடம்பெற்ற மோதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு பலஸ்தீனர் ஒருவரின் கத்திக் குத்து தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர் பலியாகினர். இதன்போது இஸ்ரேலிய படை யின் தாக்குதல்களில் 1,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.

புனித தலத்தின் நிர்வாகமான இஸ்லாமி வக்பு சபை, பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த நேற்று வழிபாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. “பள்ளிவாசல் வளாகத்திற்குள் எம்மால் தொழ முடியும்” என்று மூத்த வக்பு அதிகாரியான அப்தல் அஸீம் சல்ஹாப் குறிப்பிட்டார்.

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் அல் அக்ஸா வளாகத்தில் அத்துமீற தசாப்த காலமாக முயற்சிக்கின்றன. இப்போது வெற்றியின் புது யுகத்தில் இருக்கிறோம். ஒன்றுதிரண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸும், அல் அக்ஸா பள்ளிவாலுக்குள் தொழுகைக்கு திரும்பும்படி வழிபாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “இறைவன் நாடினால் பள்ளிவாசலுக்கு தொழுகைகள் நடைபெறும்” என்று நேற்று செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

அல் அக்ஸா வளாகத்தில் இருந்து இஸ்ரேலின் தடுப்புகள் அகற்றப்பட்டதை ஒரு ‘வரலாற்று வெற்றி’ என்று காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு பாராட்டியுள்ளது.

1967 ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான அல் அக்ஸா வளாகத்தில் யூத வழிபாட்டாளர்களுக்கு அனுமதி வழங்க இஸ்ரேல் முயன்றபோதும் பலஸ்தீனர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இஸ்ரேல் அந்த திட்டத்தை கைவிட்டது. தற்போது இங்கு முஸ்லிம்களுக்கு மாத்திரமே வழிபாட்டில் ஈடுபட அனுமதி உள்ளது.

யூதர்களுக்கு இங்கு செல்ல முடியும் என்றபோதும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. கடந்த அரை நூற்றாண்டாக முஸ்லிம்கள் பள்ளிவாசல் வளாகத்தில் தனது அந்தஸ்த்தை தக்கவைத்துக் கொண்டபோதும் இஸ்ரேல் அல் அக்ஸாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக பெரும்பாலான பலஸ்தீனர்கள் நம்புகின்றனர்.

2 கருத்துரைகள்:

الحمد لله الله اكبر

Masha Allah!இவ்விடயத்தில் துருக்கி ஜனாதிபதி மாத்திரமே இஸ்ரயேலின் இராஜதந்திர உறவுகளை நிறுத்தி தமது எதிர்ப்பை முழுமையாக வெளிப்படுத்தினர்!

Post a Comment