Header Ads



யாழ்ப்பாணத்தில் பிறந்த சிங்கப்பூரின் பிரதிப் பிரதமர், அந்நாட்டு அமைச்சர் பார்வை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், சிங்கப்பூரின் முதலாவது வெளிவிவகார அமைச்சராகவும், பிரதிப் பிரதமராகவும் இருந்த சின்னத்தம்பி இராஜரட்ணம் பிறந்த வீட்டுக்குச் சென்றிருந்தார்.

நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், சிங்கப்பூரின் முதலாவது வெளிவிவகார அமைச்சராகவும், பிரதிப் பிரதமராகவும் இருந்த இராஜரட்ணம் பிறந்த வீட்டைப் பார்க்க தொல்புரத்துச் சென்றிருந்தார்.

இங்கு ராஜரட்ணத்தின் உறவினர்கள் அவரை வரவேற்று உபசரித்தனர். அத்துடன், அவர்கள் விவியன் பாலகிருஸ்ணனுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினர்.

சிங்கப்பூரின் முதல் வெளிவிவகார அமைச்சர் பிறந்த இல்லத்துக்குச் சென்றது மகிழ்ச்சி அளிப்பதாக, விவியன் பாலகிருஸ்ணன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

1915ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில் பிறந்த இராஜரட்ணம், பின்னர் சிங்கப்பூரில் கல்வி கற்று அங்கு அரசியலிலும் ஈடுபட்டார்.

1959ஆம் ஆண்டு தொடக்கம் 1965ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூரின்  கலாசார அமைச்சராக பதவி வகித்தார்.

1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் குடியரசாக உருவான போது. முதலாவது வெளிவிவகார அமைச்சராக இராஜரட்ணம் நியமிக்கப்பட்டார்.

1980ஆம் ஆண்டு வரை – 15 ஆண்டுகள் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த இராஜரட்ணம், 1985ஆம் ஆண்டு பிரதி பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், 1988ஆம் ஆண்டு வரை அவர் மூத்த அமைச்சராக இருந்து ஓய்வு பெற்றார்.

2006ஆம் ஆண்டு காலமான இராஜட்ணம் நினைவாக, அனைத்துலக கற்கைகளுக்கான ராஜரட்ணம் பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.