Header Ads



"ஐதேக - சுதந்திரக் கட்சி பதற்றத்தின் பிரதிபலிப்பு இது"

ஐதேக தலைவர்களின் விருப்பங்களுக்கு முரணாகவே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், புதிய வெளிவிவகாரச் செயலராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலராக இருந்த எசல வீரக்கோன், நேற்று சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டதுடன், வெளிவிவகாரச் செயலராக பிரசைாத் காரியவசம் நியமிக்கப்பட்டார்.

சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

தற்போது அமெரிக்காவில் தூதுவராகப் பணியாற்றும் பிரசாத் காரியவசம், வரும் ஓகஸ்ட் 15ஆம் நாள் வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்பார்.

மூத்த துறைசார் இராஜதந்திரியான எசல வீரக்கோன், விரும்பியே இந்த இடமாற்றத்தைப் பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

இதையடுத்து, புதிய வெளிவிவகாரச் செயலராக, பிரசெல்சில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரொட்னி பெரேராவை நியமிப்பதற்கு ஐதேக தலைவர்கள் முனைப்புக் காட்டியிருந்தனர்.

எனினும் ஐதேகவைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவரின் தலையீட்டினால், சிறிலங்கா அதிபரின் விருப்பத்தின் பேரில், பிரசாத் காரியவசம் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்ரெம்பருடன் அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் பிரசாத் காரியவசத்தை இந்தப் பதவிக்கு நியமிக்குமாறு சிறிலங்கா அதிபர் தமது செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் இந்த நகர்வு, ஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி இடையிலான பதற்றத்தின் பிரதிபலிப்பே என்று  கூறப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு ஐதேகவின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.