Header Ads



13 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு

13 மாவட்டங்களைச் சேர்ந்த 260,000 குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வட மாகாணம், வட மத்திய மாகாணம், மற்றும் கிழக்கு மாகாணம் என்பன வறட்சியினால் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியினால், விவசாய செய்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 136 கிராம சேவகர் பிரிவுகளில், 135 கிராம சேவகர் பிரிவுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நீர் நிலைகள் நீர் வற்றி காணப்படுவதுடன், கிணறுகளின் நீர் மட்டமும் குறைவடைந்துள்ளது.

50 கிராம சேவகர் பிரிவுகளுக்கு பௌசர் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தில் குளங்களின் நீர் வற்றியுள்ளமையினால், சிறுபோக நெற்செய்கை இம்முறை கைவிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பாவற்குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்தமையால், நெற்செய்கை கைவிடப்பட்டு, சுமார் 600 ஏக்கர் வயல் நிலத்தில் சிறுதானிய செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மலையாளபுரம் புது ஐயங்குளம் வற்றியமையால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குளத்து நீரை நம்பி 40 ஏக்கர் சிறுதானிய செய்கையும், 20 ஏக்கர் நெற்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர் பம்பிகளை பயன்படுத்தி சிறுதானிய செய்கைகளுக்கு தேவையான நீரை மிகுந்த சிரமத்துடன் பெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.