June 20, 2017

ஞானசாரரை எதிர்பார்த்து, கோட்டைவிடும் முஸ்லிம்கள்..!

ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்கள் மரிச்சுக்கட்டி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலுக்கு கையொப்பம் இட்ட விவகாரத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெருமாறு கோரி ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டனர், அதைத்தொடர்ந்து இறக்காமம் மாணிக்கமடு புத்தர்சிலை விவகாரம் என்பன போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிக்க அதற்கு பொறுப்பு கூறவேண்டிய அரசாங்கமே இனவாத சக்திகளின் உதவியின் மூலமாக முஸ்லிம்களின் உணர்வலையை கட்டுப்படுத்த ஞானசாரதேரரை தூண்டிவிட்டு பள்ளிவாயல் முஸ்லிம் வர்த்தக நிலயங்கள் என மூதூர் செல்வநகர் போன்ற பிரதேசங்களில் பிரச்சினைகளை தோற்றுவித்து மரிச்சுக்கட்டி விடயத்தையும், மாணிக்கமடு புத்தர்சிலை விவகாரத்தையும் மறக்கடிக்கச் செய்துள்ளதுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தை முஸ்லிம் சமூகம் ஆதரித்ததற்கான பிரதான காரணமாக இருந்த ஞானசாரதேரருக்கு ஆட்சிபீடம் ஏறியவுடன் நல்லாட்சி அரசாங்கம் செங்கம்பல விரிப்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து விருந்து உபசாரம் செய்து அவருக்கான அந்தஸ்த்தையும், கௌரவத்தையும் வழங்கியதை முஸ்லிம் சமூகம் இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறது.

நல்லாட்சியின் ஆரம்ப காலகட்டத்திற்குள்ளேயே ஞானசார தேரருடைய இனவாத கோசங்கள் அதிகரித்து முஸ்லிம்கள் தங்களுடைய உயிரிலும் மேலாக நேசிக்கும் புனித திருக்குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் எனவும், தீயிட்டு கொழுத்தவேண்டும் எனவும் நபி முகம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹுவுக்கு கடிதம் அனுப்பும் படியான நச்சுக்கருத்துக்களை கூறி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மத கலாச்சார விழுமியங்களையும் கேவலப்படுத்தியதுடன் இஸ்லாமிய கலாசலைகளிலும், குர்ஆன் மத்ரஸாக்களிலும் தீவிரவாதம் போதிக்கப்படுவதாகவும், ஆயுதப்பயிற்சி வழங்கப்படுவதாகவும் போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட அதிர்ப்தி காரணமாக கடந்த தேசிய மீலாத் தின நாள் அன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஜனாதிபதி அவர்களை நேரில் சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். ஆனால் அந்த விடயம் தொடர்பில் இதுவரையில் ஞானசாரவுக்கு எதிராக எந்தவிதமான கண்டனங்களையும் ஜனாதிபதி வெளிகாட்டவில்லை. மாறாக பௌத்த சின்னங்களை பாதுகாக்கும், தொல்பொருள் ஆராய்ச்சி படையணியின் பொறுப்புதாரியாக ஞானசாரவை நியமித்து ஜனாதிபதி அழகுபார்த்தார்.

மட்டக்களப்பிற்கு படைபலத்துடன் வந்து கலவரம் ஒன்றை ஏற்படுத்த ஞானசார தேரர் முயன்ற வேளையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தின் கட்டளைக்கு ஏற்ப அவர் தடுத்து நிறுத்தப்பட்டதும் நீதிமன்றத்தின் கட்டளையை பொலிசார், ஊடகங்களுக்கு முன்னிலையில் பகிரங்கமாக கிழித்து வீசியதோடு பொலிசாரையும் நாட்டின் ஜனாதிபதி பிரதமரை மிகவும் அவதூராக விமர்சனமும் செய்தார். பிற்பட்ட காலத்தில் அதே ஞானசாரதேரரை அரச அனுசரணையுடன் நாட்டின் நீதியமைச்சர் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு அழைத்துவந்ததை தவிர அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

ஹோமாகமை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஞானசாரதேரர் பிணையில் விடுதலையாகி பின்னர் நீதிமன்றுக்கு சமூகம் தராத குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறாரே தவிர முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டுக்காக அல்ல என்பதையும், அவ்வாறு அவர் கைதுசெய்யப்படவேண்டியவராக இருந்திருந்திருந்தால் கடந்த மாதம் நல்லிரவு பொழுதில் குர்நாகலில் வைத்து பொலிசார் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். என்பதையும் அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டு தற்போது நான்கு தனி பொலிஸ்குழு அமைத்து தேடுவதாகவும், அவர் தலைமறைவாகி இருப்பதாகவும், அமைச்சர்கள் சிலர் பாதுகாப்பு வழங்குவதாகவும், போலிக்கதைபேசி முஸ்லிம்களை ஏமாற்ற அரசு நடந்து கொள்வதை பார்க்கின்ற போது அரசாங்கமே ஞானசார தேரரை வன்முறைச் சம்பவங்களை செய்ய தூண்டிவிட்டு இப்போது பாதுகாப்பு வழங்குகிறதா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

அண்மைக்காலமாக அமைச்சர் சம்பிக்கவுக்கும், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் எதிராக பகிரங்கமாக குற்றம்சாட்டியவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படாமையும் அமைச்சர்களான எஸ்.பி திஸ்ஸாநாயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மங்கள சமரவீர போன்றவர்களின் முன்னுக்கு பின் முரனான ஊடக அறிக்கைகளும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இந்தப்பிரச்சினைகளுக்கு மத்தியில் மரிச்சுக்கட்டி மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாது மூடி மறைக்கப்பட்டதும் மாணிக்கமடு சிலை விவகாரம் தற்சமயம் ஒருபடி மேலாக விகாரை எழுப்புவதற்கான வேலைத்திட்டமும் வேகமாக நடந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இந்த விடயங்களை ஆராய்ந்து கருத்தில் கொண்டு ஞானசாரவின் கைதை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், எமது அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் தலைமைகளுக்கு அழுத்தங்களை கொடுத்து சமூகத்தின் பிரச்சினையையும் தேவையையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

தவளைக்கு பயந்து முதலையிடம் மாட்டிக்கொண்ட, நல்லாட்சிக்கு வாக்களித்து மஹிந்தவின் தோல்வியில் வெற்றி கொண்டாடிய முஸ்லிம் சமூகம் கண்ணத்தில் அரைபட்டு பேசுவதற்கு வார்த்தையில்லாமல் மௌனியாக இருந்துவிடாமல் காலத்துக்கு தேவையான விடயங்களை பேசி பெற்றுக்கொள்ள முனைப்பு காட்ட வேண்டும்.

அஹமட் புர்க்கான்

2 கருத்துரைகள்:

சிறுபான்மையினரை ஏமாற்றுவதிலும் அவர்களது வாக்குகளைக் கொள்ளையடிப்பதிலும் இந்தச் சிங்கள அரசியல் வாதிகளை எவராலும் வெல்லமுடியாது! நாட்டுக்கு மாற்றம் கொண்டு வருவோமென்று, கொண்டு வந்ததோ எங்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைத்தான்.

சந்தேகிக்க ஒன்றும் இல்லை எல்லாம் ஒரீஜினல் அனுசரணையோடுதான் நடக்கிறது .

Post a Comment