Header Ads



கடாபியின் மகன், விடுவிக்கப்பட்டார்

லிபியாவில், பதவியிலிருந்து இறக்கப்பட்ட முன்னாள் தலைவர், கர்னல் முகமது கடாஃபியின் இரண்டாவது மகன் சயிப் அல் இஸ்லாம் கடாஃபி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லிபியாவில் மேலும் பதற்றத்தை இது உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தந்தையின் விருப்பமிக்க வாரிசாக கருதப்பட்ட சயிப், கடந்த ஆறு வருடங்களாக ஆயுததாரிகளால் சிண்டான் நகரில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.

அவர் வெள்ளியன்று விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரின் புகைப்படம் வெளியில் காட்டப்படவில்லை என்றும் அபு பக்கர் அல் சித்திக் பட்டாலியன் தெரிவித்துள்ளது.

கிழக்கு லிபியாவில் உள்ள டிப்ரூக் பகுதியில் அவர் இருந்ததாக பிபிசியிடம் செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்த அவரின் வழக்கறிஞர் கலெத் அல் சைய்தி, பாதுகாப்பு காரணங்கள் கருதி அவர் எந்த நகருக்கு போகிறார் என்பதை தெரிவிக்கவில்லை.

"இடைக்கால அரசின்" வேண்டுகோளுக்கு இணங்க தாங்கள் செயல்படுவதாக அபு பக்கர் அல் சித்திக் பட்டாலியன் தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்கு பகுதியிலிருக்கும் அந்த அரசு, சயிப் அல் இஸ்லாமிற்கு ஏற்கனவே பொது மன்னிப்பு வழங்கியது.

ஆனால், ஐநா ஆதரவு பெற்ற தேசிய உடன்பாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் மேற்குப் பகுதியில், ட்ரிப்போலி நகரில் இருக்கும் ஒரு நீதிமன்றத்தால் , விசாரணைக்கு வராத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் சயிப் அல் இஸ்லாம் கடாஃபியின் விடுதலை குறித்து வந்த செய்திகள் பொய்யானவை என நிருபிக்கப்பட்டுள்ளது

தனக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியை ஒடுக்க, சயித்தின் தந்தை கடாஃபியால் மேற்கொள்ளப்பட்ட பல மனித நேயமற்ற செயல்களுக்காக சயித் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வந்தார்.

நைஜருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலைவனத்தில் சயிப் கைது செய்யப்பட்டார். பிறகு சில விரல்கள் இல்லாத நிலையில் அவர் திரும்பி வந்தார்.

மேற்கு பகுதியில் கடாஃபி ஆட்சியின் பிரதிநிதியாகவும், தந்தையின் வாரிசாகவும் அறியப்பட்டார்.

லிபியாவிலும், வெளிநாட்டிலும் பலர் அவரை தூற்றினாலும் லிபியாவில் அவருக்கு ஆதரவாளர்களும் உள்ளனர்; மேலும் அவர் லிபியாவின் அரசியலில் மீண்டும் நுழைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

44 வயதாகும் சயிப் அல் இஸ்லாமிற்கு, சர்ச்சைக்குரிய முறையில் லண்டன் பொருளாதார பள்ளியிலிருந்து முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

2000ஆம் ஆண்டிற்கு பிறகு மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக நன்கு அறியப்பட்டார் சயிப், கடாஃபியின் நீண்ட கால ஆட்சி முடிவிற்கு வந்த மூன்று மாதங்களுக்கு பிறகு நவம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு பிடிபட்டார் சயிப்.

மேலும் தந்தையின் ஆட்சியின் சீர்த்திருத்தமுகமாகவும் அவர் பார்க்கப்பட்டார்.

ஆனால் 2011 ஆம் ஆண்டின் கலவரத்திற்கு பிறகு வன்முறையை தூண்டியதாகவும், எதிர்பாளர்களை கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நான்கு வருடங்களுக்கு பிறகு கடஃபியின் 30 கூட்டாளிகளிடையே நடத்திய விசாரணைக்கு பிறகு, பறக்கும் படையால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஜூன் 1972: லிபியாவின் ட்ரிப்போலியில் லிபிய தலைவர் கடாஃபியின் இரண்டாவது மகனாக பிறந்தார்.

பிப்ரவரி 2011: கடாஃபி அரசுக்கு எதிரான கலவரம் தொடங்கியது.

ஜூன் 2011: மனித உரிமைக்கு எதிரான குற்றம் இழைத்ததாக சரவதேச குற்றவியல் நீதிமன்றம் சயிப் மீது கைது ஆணை பிறப்பித்தது.

ஆகஸ்து 2011: அரசுக்கு எதிரான படைகளிடன் கட்டுப்பாட்டில் திரிப்போலி வந்தபிறகு தலைநகரை விட்டு, பனி வாலிடிற்கு தப்பிச் சென்றார் சயிப்.

அக்டோபர் 2011: கடாஃபி மற்றும் சயிபின் தம்பி கொல்லப்பட்டனர்.

19 நவம்பர் 2011: நைஜரின் தெற்கு பகுதிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது ஆயுததாரிகளால் பிடிக்கப்பட்டார்.

ஜூலை 2015: விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படாமல், திரிப்போலி நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஜூன் 2017: லிபியாவின் போட்டி அரசுகளில் ஒன்றால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.