Header Ads



தொழுகைக்காக வந்தவர்கள் மீது, வேன் மோதி ஒருவர் பலி, 8 பேர் காயம்


லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றிற்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இது ஒரு "பெரிய சம்பவம்" என போலிசார் தெரிவிக்கின்றனர். செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள ஃபின்ஸ்பரி பார்க் மசூதிக்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டன் நேரப்படி இரவு 12.20 மணிக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டனர் என பெருநகர போலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் இஸ்லாமிய கவுன்சில், அந்த வேன் "வேண்டுமென்றே" வழிபாட்டாளர்கள் மீது மோதியதாக தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பலர் ரமலான் நோன்பை முடித்துவிட்டு தொழுகைக்காக வந்தவர்கள் என நம்பப்படுகிறது.

லண்டன் அவசர ஊர்தி சேவை, மருத்துவ ஊர்திகள், கருவிகள் மற்றும் பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் காயமடைந்தவர்களுக்கு பலர் உதவிகள் செய்வது போலவும் பரப்பரப்பான காட்சிகள் காணப்படுகின்றன.

தெருவில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் செயற்கை சுவாசம் கொடுப்பது போலவும், தலையில் காயமடைந்த ஒருவருக்கு தற்காலிக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகளும் அதில் காணப்படுகின்றன.

இது மிகவும் "மோசமான சம்பவம்" என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் வருத்தம் தெரிவித்துள்ள அவர், அவசர சேவைகள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வேன் வந்து மோதிய போது தான் வேனின் பாதையை விட்டு நகர்ந்தது எவ்வாறு என சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"வேன் நேராக வந்து எங்கள் மீது மோதியது; நிறைய பேர் இருந்தனர். எங்களை உடனடியாக நகர்ந்து போகும்படி கூறினர்".

"நான் மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டேன் என்னைச் சுற்றி உடல்கள் கிடந்தன."

"கடவுளுக்கு நன்றி; நான் வேன் வந்த பாதையில் இருந்து நகர்ந்து விட்டேன். அனைவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் அதிகமான காயம் ஏற்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் மற்றொருவர், மக்கள் "கூச்சலிட்டுக் கொண்டும் கதறிக் கொண்டும்" இருந்ததாக தெரிவித்தார்.

லண்டன் அவசர ஊர்தி சேவையின் துணை இயக்குநர், அவசர ஊர்திக் குழுக்கள், அவசரகால மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள், மற்றும் சிறப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"லண்டனின் வான்வழி அவசர ஊர்தி சேவையைச் சேர்ந்த, விபத்துகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கும் குழுக்களும் கார் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன".

சம்பவத்தில் உள்ள பிற அவசர சேவைகளுடன் தாங்கள் இணைந்து பணிபுரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்களது முன்னுரிமை காயங்களின் அளவையும், தன்மையையும் ஆராய்ந்து, அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்படுகின்றனரா என்பதை உறுதி செய்வது" என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. UK is becoming a terrorist nation like next France. Have to strong their territories to prevent the extremists invasion.

    ReplyDelete

Powered by Blogger.