Header Ads



நிவாரணப் பணிகளில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு நன்றி - கிரிகொல்ல விகாராதிபதி,


மோசமான வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படுகின்ற மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கும் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெயாங்கல்ல, கிரிகொல்ல பிரதேசங்களுக்கு இன்று புதன்கிழமை (31) நேரில் சென்ற அமைச்சர்  ரவூப் ஹக்கீம், வெள்ளப் பாதிப்புகள் பற்றி கேட்டறிந்துகொண்டார். அதன்பின்னர், வெயாங்கல்ல ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

களுத்துறை மாவட்டத்திலுள்ள வெயாங்கல்ல பிரதேசம் அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதால் அதற்கு நிரந்தரமானதொரு தீர்வு காணப்படவேண்டும். குக்குலேகந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட பின்னர், மிகவும் மோசமாக வெயாங்கல்ல பிரதேசம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு நிரந்தர தீர்வைப் பெறுவதற்காக நீர்ப்பாசன அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றுடன் பேசவேண்டும். அதற்கான சந்திப்பை நான் பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்து தருகின்றேன். இந்த ஊரிலுள்ள நீர்ப்பாசனத்துறையில் தேர்ச்சியுள்ளவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்துவந்து, இந்தப் பிரச்சினைக்கான மாற்‌றீடு குறித்து நாங்கள் பேசுவோம்.

மாவட்ட மட்டத்தில் அல்லது பிரதேச செயலாளர் மட்டத்தில் இதற்கு தீர்வுகாண்பதற்கான திட்ட வரைபுகள், முன்மொழிவுகள் ஏதாவது ஏற்கனவே செய்திருக்கலாம். அப்படியிருந்தால் அதனை நிறைவேற்‌றுவதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசிப்போம். அப்படி இல்லையென்றால்,  புதிய வகையில் இதற்கான மாற்றுவழிகள் குறித்து ஆலோசிப்போம்.

வெள்ளம் ஏற்படும்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக இயந்திரப் படகு ஒன்றை நிரந்தரமாக வெயாங்கல்ல ஜும்ஆ பள்ளிக்கு  நாளைக்கு கையளிக்கிறேன். அடுத்த பள்‌ளிவாசலுக்கு இன்னுமொரு இயந்திரப் படகு தேவைப்பட்டால் அதனையும் நான் பெற்றுத்தருகிறேன்.

அதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிணறுகளை இறைத்து சுத்தம்செய்து, குளோரின் இட்டு அவற்றை பாவிக்கக்கூடிய வகையில் மக்களிடம் கையளிப்போம்.

அகலவத்தை, அளுத்கம, மத்துகம பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, 190 மில்லியன் டொலர் செலவில் நீர் வழங்கல் திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2020ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீடுகளுக்கு குழாய்நீர் வழங்கப்படும் என்றார்.

இதன்போது, அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெயாங்கல்ல பிரதேசம்  பிரதேசத்திலுள்ள இரு பள்ளிவாசல்களுக்கும் கிரிகொல்ல விகாரைக்கும் விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த கிரிகொல்ல விகாராதிபதி, பள்ளிவாசல் மூலம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், இன, மத பேதமின்றி முஸ்லிம்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாகவும் கூறி அதற்கு முஸ்லிம் சமூகத்துக்கு நன்றி தெரிவித்தார்.

2 comments:

  1. முஸ்லீம்கள் நிவாரணப் பணி செயவதும் இவர்கள் வாழ்த்துவதும் வழமை. பள்ளிகளை இடிக்காமல் இருக்கும் அறிக்கையை விடச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. துவேசக்கருத்துகளை விதைக்கும் யான சாரை குறூப்பை அடக்க வளிசெய்யுங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.