Header Ads



பசுவுக்கு ஆம்புலன்ஸ் - மகனின் சடலத்தை தோளில் சுமந்துசென்ற தந்தை


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காயமடைந்த, நோயுற்ற பசுக்களைக் காக்கும் நோக்கில் ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா நேற்று தொடங்கி வைத்தார். பசு சேவைக்காக இலவச தொடர்பு எண்ணும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களும் அந்த எண்ணை அழைத்து பசுக்களுக்கு உதவ முடியும் எனவும், ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவரோடு, ஓர் உதவியாளரும் இருப்பார் எனவும் அரசு தெரிவித்திருந்தது. 

பொது மக்களுக்கே போதிய மருத்துவ உதவிகள் சரியான முறையில் கிடைக்காத நிலை அம்மாநிலத்தில் இருக்கும் போது, பசுவுக்கு ஆம்புலன்ஸ் தேவையா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், அம்மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று 15 வயது சிறுவன் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

இதையடுத்து, சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். பின்னர், அச்சிறுவனின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாததால் அச்சிறுவனின் தந்தை சடலத்தை தனது தோளில் சுமந்து சென்றுள்ளார். இந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அம்மாவட்ட மருத்துவ அலுவலர் இச்சம்பவம் குறித்து பேசுகையில் ,”அச்சிறுவன் மரணமடைந்த நேரத்தில் பஸ் விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால், அச்சிறுவனுக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.