Header Ads



ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம்களுக்கு வழங்கும் முக்கிய அறிவுரை

கடந்த சில தினங்களாக நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சில தீய சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளிலும் மஸ்ஜித்களையும் முஸ்லிம் வியாபார நிலையங்களையும் தாக்கும் செயற்பாடுகளிலும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதிப்பதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய சிவில் அமைப்புகள் இணைந்து இந்த தீய சக்திகளின் திட்டங்களை முறியடிக்க அரச தரப்புகளை தொடர்புகொண்டு செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் பின்வரும் விடயங்களை பின்பற்றி நிதானமாகவும் அமைதியாகவும் நடக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

01. அல்லாஹு தஆலாவுடனான தொடர்பை சீராக்குதல்:
• முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹு தஆலாவின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். நமக்கு உதவி செய்வதில் அல்லாஹு தஆலாவை மிஞ்சிய சக்திகள் எதுவும் கிடையாது. எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் நல்லமல்கள் மூலம் அல்லாஹு தஆலாவுடனான தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துதல்.
• முஸ்லிம் சமூகம் முழு மனித சமுதாயத்தினதும் நலவுக்காக வெளியாக்கப்பட்ட சமூகமாகும். எனவே ஏனையோருக்கு நலவை நாடுவதும், அவர்களை நன்மையின் பக்கம் அழைப்பதும், தீமையை விட்டு அவர்களை தடுப்பதும் எம் கடமைகளாகும் என்பதை சிந்தித்து நாம் செயற்பட வேண்டும்.
• துஆ என்பது ஒவ்வொரு அடியானும் அல்லாஹ் தஆலாவிடம் நேரடியாகத் தமது கஷ்ட நஷ்டங்களை முறையிட்டு அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆயுதமாகும். எனவே நாட்டு நிலைமை சீராக அல்லாஹு தஆலாவிடம் அதிகமாக பிரார்த்தித்தல். மேலும் துஆவுல் கர்ப் (கஷ்டமான, துன்பமான நேரங்களில் ஓதப்படும் துஆக்கள்) தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களையும் கருத்திற்கொண்டு, இந்த துஆக்களை நம்பிக்கையுடன் ஓதிவருதல்.
• குனூதுன் நாஸிலா என்பது அச்சம், பயம், பஞ்சம், வரட்சி போன்றவை ஏற்படும் போது அவை நீங்குவதற்காக தொழுகையில் கேட்கப்படும் துஆவாகும். ஐவேளைத் தொழுகைகளிலும் மஸ்ஜித்களில் குனூதுன் நாஸிலாவை ஓத சகல மஸ்ஜித் நிர்வாகிகள் உரிய ஏற்பாடுகளை செய்தல். மஸ்ஜித் இமாம்கள் குனூதுன் நாஸிலா தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படல்.

02. சகவாழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்:
• ஜம்இய்யாவின் கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், ஏiனைய அமைப்புகள் இணைந்து இனவாதத்தை முறியடிக்க தமது ஊருக்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல். குறிப்பாக பொலிஸாருடன் தொடர்ப்புகளை ஏற்படுத்தி எமது மஸ்ஜித்களுக்கும் வீடுகளுக்கும் வியாபார நிலையங்களுக்கும் முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல். அத்துடன் ஜூம்ஆ தொழுகைகளின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைக்கேற்ப செய்துகொள்ளல்.
• ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் துறைசார்ந்தவர்களும் சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து சகவாழ்வை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டல்கள் ஜம்இய்யாவின் சகவாழ்வுப் பிரகடனத்தில் ஏலவே வழங்கப்பட்டுள்ளன.
• இன நல்லுறவைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்ந்து கொள்ளுதல். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஏனைய சமயங்களுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடுவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளல்.
• குறிப்பிட்ட சிறு குழுவினரின் அடாவடித் தனங்களை வைத்து ஆத்திரம் கொள்ளாது நிதானமாகவும் தூர நோக்கோடும் நடந்து கொள்ளல்.
• பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாருக்கு அறிவித்து உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளல்.

03. றமழான் மாதத்துடன் தொடர்பான வழிகாட்டல்கள்:
• அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல் போன்ற நல்லமல்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல்.
• இளைஞர்கள் மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன், இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றோர் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.
• இரவுநேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளின் சத்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.
• பெண்கள் மஸ்ஜித்களுக்கு செல்லும் போது ஷரீஆ வரையறைகளைப் பேணி உரிய பாதுகாப்புடன் செல்லல். ஆண்கள் இது குறித்து சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.
• மஸ்ஜித்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பிறருக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.
• மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.

மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தி நாட்டில் ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதோடு, எம்மை வந்தடையவுள்ள றமழானை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் மக்கள் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.

1 comment:

Powered by Blogger.