May 23, 2017

"நெருக்கடிமிக்க நாட்கள்" விரிக்கப்படும் சதிவலைகளை, கடப்பது எப்படி..?

-சிராஜ் மஷ்ஹூர்-

இனவாதிகளின் இன்றிரவு எங்கு வெறியாட்டம் அரங்கேறும், எத்தனை கடைகள் எரிக்கப்படும் என்ற அச்சத்துடன்தான் தினமும் தூங்க வேண்டியிருக்கிறது. காலையில் கண் விழித்தால், இரவின் அந்த அச்சம் நிதர்சனமான உண்மையாகி விடுகிறது. 

ஜனாதிபதியும் பிரதமரும் 'அதி புத்திசாலித் தனமாக' கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இந்த நாட்களில் நாட்டை விட்டே 'ஒளித்தோடுகின்றனர்.' முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் இதுவரை ஜனாதிபதியையோ பிரதமரையோ நேரில் சந்திக்க முடியாமல் இருக்கிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருக்க, அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் போய் அழ வேண்டியிருக்கிறது. மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்து மடிப்பிச்சை கேட்க வேண்டியிருக்கிறது. வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்குச் சென்று மன்றாட வேண்டியிருக்கிறது. இவற்றைச் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. நமது சமூகத்தினது கையறு நிலையின் குறிகாட்டிகளே இவை. 

சுதந்திரத்திற்குப் பிந்திய இரு கட்சி ஆட்சி முறை விளைவாக்கியிருக்கும் பெருந் தோல்வியின் அவலத்தையே கண்டு கொண்டிருக்கிறோம். அவர்கள் அப்படியென்றால், இந்த விடயத்தில் இவர்களும் அப்படித்தான் என்ற கதையாகி விட்டது. மூன்றாவது சக்திக்கான பாதையை நோக்கி நமது தேடல் விரிய வேண்டும்.

இந்த அவலம் புதிதில்லைதான். வரலாறு மீள்கிறது. வன்முறைப் போராட்டத்தைத் தூண்டிவிடுவதற்கான முஸ்தீபுகள்தான் இவை. மீண்டும் நெருக்கடி மிக்க நாட்களுக்குள்ளால் நகர்ந்து கொண்டிருக்கிறோம். 1970,80 களில் தென்னிலங்கைச் சிங்களவர்கள், 1970 கள் முதல் 2010கள் வரை தமிழர்கள், இப்போது முஸ்லிம்கள்...! இதுதான் கண்ணுக்குத் தெரியாத 'அவர்களின்' கணக்கு. இந்தக் கணக்கை நாம் பிழையாக்க வேண்டும். அதுதான் இப்போது நமக்கு முன்னெயுள்ள பெரும் சவால்.

கடந்த அரசாங்க காலத்தில் மஹிந்தவும் இப்படித்தான் பாராமுகமாக இருந்தார். அதுவே அவர் வீட்டுக்குப் போகக் காரணமாய் அமைந்தது. இப்போது 'தேசிய அரசாங்கம்', 'நல்லாட்சி அரசாங்கம்' என்று பூச்சாண்டி காட்டும் மைத்திரியும் ரணிலும் இதற்கு நல்ல விலை கொடுக்க வேண்டி வரும். நிறைவேற்று அதிகாரம் எதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இங்கு அவதானிப்பது பொருத்தம்.

ஆனால், பிரச்சினை அதுவல்ல. எந்தப் பேய் ஆண்டாலும் பிணந்தின்னப் போவது மக்கள்தான். எப்போதும் இழப்புகளை சந்திப்பது அப்பாவி மக்கள்தான். உயிரிழப்புகளும் பொருள் இழப்புகளும் தொடர்வதற்கான 'அச்ச மனநிலை' தூண்டி விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. நோன்பு காலம் நெருங்கும்போது இப்படி அச்சத்தை விதைப்பது தொடர்கதையாகி விட்டது.

குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களை சூடேற்றி,  வன்முறைப் பாதைக்குள் இழுத்து விடத் தூண்டும் பெரும் சதி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. போதாததற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு (Counter Terrorism Act - CTA) அமைச்சரவை பச்சைக் கொடி காட்டியிருக்கிறது. இதன் அபாயங்கள், பின்விளைவுகள் சொல்லி மாளாதவை.

ஆதலால், இந்த நாட்களை முஸ்லிம் சமூகமும்  சமூகத் தலைவர்களும், மிகவும் அறிவுபூர்வமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டும். குறிப்பாக, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை அறிவின் தீட்சண்யத்துடனும் அனுபவத்தின் ஒளியிலும் வெல்ல வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டு உணர்வெழுச்சி விவேகத்திற்கான (Collective Emotional Intelligence) ஒரு சத்திய சோதனையாக இதைக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளை நம்பிக் கொண்டிராமல் சிவில் சமூக சக்திகள் முனைப்பாகவும் செயலூக்கத்துடனும் களமிறங்க வேண்டும். சர்ச்சைக்குரிய நபர்களை சட்டத்தின் பிடிக்குள் சிக்க வைக்க வேண்டுமே தவிர, நாம் ஒருபோதும் சட்டத்தைக் கையில் எடுத்து விடக் கூடாது. சட்ட ரீதியான காய் நகர்த்தல்களில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

ஆழமாக உரையாடுவோம்,விவாதிப்போம். அவற்றினூடாக, வெளியேறும் வழிகளையும் விடைகளையும் கண்டடைவோம். வரலாறு  நமக்காகக் காத்திருக்காது. நாம்தான் வரலாற்றில் தலையீடு செய்ய வேண்டும். அப்போதுதான் மாற்றம் சாத்தியப்படும். 23.05.2017

0 கருத்துரைகள்:

Post a Comment