Header Ads



கோடையை மிஞ்சுகின்ற, கொடிய நரகம்

இது கோடை காலம். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கின்றது. அதிகமான மாவட்டங்களில் சூரியன் சதத்தைத் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றது. காலையில் கிழக்கிலிருந்து கிளம்பும் போதே அனல் தெறிக்கின்றது. அது உச்சி நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வெப்பத்தின் அடி கூடிக் கொண்டே போகின்றது. மாலையில் மேற்கே மறைகின்ற வரை சூரியனின் சர்வாதிகார சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கின்றது.

மறைந்த பின்னாலும் அடிக்கின்ற அனல் காற்றின் வேகம் தணிய மறுக்கின்றது; உஷ்ணத்தின் வீரியம் அடங்க மறுக்கின்றது.

சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் உடலில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக உடல் வியர்வைத் துளிகளை வடிக்கின்றது. இரவு நடுநிசி ஆனாலும் வியர்வையின் வரத்து நின்றபாடில்லை. பூமியில் ஏறிய சூரிய உஷ்ணத்தால் பூத உடல் முழுவதும் எரிய ஆரம்பித்து விடுகின்றது.

உடலிலிருந்து உதிர்ந்த வியர்வைத் துளிகளின் மூலம் இழந்த நீர்ச் சத்தை ஈடுகட்டுவதற்காக, திரும்பப் பெறுவதற்காக தாகத்தால் வாய் தவிக்கின்றது. அதன் விளைவு, குடம் குடமாய் தண்ணீரை உடல் உள்ளே இழுத்துக் கொள்கின்றது. இழப்பீட்டைச் சரி செய்து கொள்கின்றது. தாகம் தணிந்து, உடலில் தெம்பு கிடைத்ததும் வெயிலின் கொடுமையில் ஒரு சிறிய விடுதலை கிடைக்கின்றது. ஒருநாள் முடிந்து மறுநாள் என்று இந்தக் கோடை காலம் முழுவதும் இப்படியே கழிகின்றது.

இரண்டு மாதங்களில் கோடைக்காலம் முடிவுக்கு வருகின்றது. அதன் பிறகு ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கோடையின் கொடுமை! இதிலிருந்து தப்பிப்பதற்காக ஊட்டி, கொடைக்கானல் என்றும், ஓரளவு வசதி உள்ளவர்கள் சிம்லா, காஷ்மீர் போன்ற இடங்களுக்கும், பெரும் பணக்காரர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று கோடையின் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர். உள்நாட்டுக் கோடை என்பதையே இந்த உல்லாசப் பயணத்தில் மறந்து விடுகின்றனர்.

இது இந்த உலகத்தில்! ஆனால் மறு உலகில், கொடிய நரகில் மாட்டிக் கொள்வோரின் கதி என்ன? அந்த நரக நெருப்பு என்பது வெறும் இரண்டு மாதங்களுக்கு மட்டும் வந்து காட்டி விட்டுப் போகின்ற கோடை போன்றதா? நிச்சயமாக இல்லை.

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். (அல்குர்ஆன் 78:21-23)

அதிலிருந்து அவர்கள் தப்ப நினைக்கும் போதெல்லாம் திரும்ப நரகத்திற்கே அனுப்பப்பட்டு விடுவர். கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்). (அல்குர்ஆன் 22:22)

அந்த நரகத்தில் நிரந்தரமாக வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். தண்ணீர், தண்ணீர் என்று அவர்கள் கேட்கின்ற போது, உருக்கப்பட்ட செம்பினாலான கொதிநீர் தான் கொடுக்கப்படுவார்கள். ஆனால் அந்தத் தண்ணீரை அவர்கள் குடிக்க முடியாது. அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன் 18:29)

அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறு மிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது. (அல்குர்ஆன் 14:16-17)

இவ்வுலகில் கோடை காலத்தில் தாகத்தைத் தணிப்பதற்காகக் குளிர்ந்த நீரைப் பருகுகின்றோம். ஆனால் அங்கு குளிர்ந்த நீர் கிடையாது. கொதிநீரே தரப்படும். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர. (அல்குர்ஆன் 78:23, 24)

இவ்வளவு தண்டனையும் நிந்தனையும் ஏன்? எதற்காக?

அல்லாஹ்வுக்கு இணை வைத்து, அவனது அடியார்களை அழைத்துப் பிரார்த்தித்ததற்காகத் தான்.

குடிநீர் கிடைக்காத அந்தக் கொடிய நரகைப் பரிசாகத் தரும் இணைவைப்பு என்ற பாவத்திலிருந்து நாம் விலகிக் கொள்வோமாக! மற்றவர்களையும் இதிலிருந்து விலக்கி, காப்பாற்றப் பாடுபடுவோமாக! நாம் இந்த நரக வேதனையைக் கோடை காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து சுவனத்திற்குரிய அமல்களைச் செய்ய அதிகம் உழைப்போமாக!

onlinepj

No comments

Powered by Blogger.