Header Ads



முஸ்லிம்களின் பாதுகாப்பை, நாங்கள் உறுதி செய்கிறோம் - சந்திராலோக்க தேரர்

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளினால் வட,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலில், சிங்கள – முஸ்லிம் மக்களுக்கிடையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மொனராகலை ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி சந்திராலோக்க தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

 மொனராகலைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் போது மொனராகலை ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த அவர், அதன் பிரதம விகாராதிபதி சங்கைக்குரிய சந்திராலோக்க தேரருடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

இதன்போது, நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை விவரித்த இராஜாங்க அமைச்சர், இதனால் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச சூழலை விளக்கினார். அத்துடன், பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார நிலையங்கள் தாக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்தார். 

விசேடமாக, குறைந்தளவில் முஸ்லிம்கள் வாழும் மொனராகலை மாவட்டத்தில் முஸ்லிம்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது தொடர்பாகவும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் - நல்லுறவை ஏற்படுத்துவதில் மதகுருமார்களின் பங்களிப்பு தொடர்பாகவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

மொனாராகலை முஸ்லிம்களது பாதுகாப்பு விடயத்தில் சந்திராலோக்க தேரர் ஆற்றி வருகின்ற அளப்பரிய சேவையினை இதன்போது பாராட்டிய இராஜாங்க அமைச்சர், எதிர்க்காலத்தில் சிங்களவர்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவினையும் - நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி அதன் ஊடாக  ஒரு நல்ல ஐக்கியமான சூழலை உருவாக்குவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளுமாறும், மாதாந்த சந்திப்புக்களை நடத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இராஜாங்க அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்ற சந்திராலோக்க தேரர், நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாதம் தொடர்பில் தாம் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், எக்காரணம் கொண்டும் இனவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும், முஸ்லிம்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வதாகவும் வாக்குறுதி வழங்கினார். அத்துடன், பௌத்த மதகுருமார் என்ற போர்வையில் வரும் வெளிச்சக்திகளுக்கு இப்பிரதேசத்தில் குழப்பத்தை உண்டுபன்ன இடமளிக்கப்போவதில்லை எனவும் உறுதியதித்தார். 

இந்தச் சந்திப்பில் மொனராகலை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி ஷம் ஷபீல், மேர்சி லங்கா நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி முஜீப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.