May 30, 2017

இரத்தினபுரி முஸ்லிம்களை மறந்தது ஏன்..? தொழுகை, நோன்பின்றி நீடிக்கிறது அவலம்

-இரத்தினபுரியிலிருந்து MLS முஹம்மத்- 

நாட்டில் நிலவிய சீர் அற்ற காலநிலையைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டம் உட்பட பல மாவட்ட மக்கள் பல்வேறு அனர்த்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர். எனினும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இரத்தினபுரி மாவட்ட மக்கள் இம்முறை பல பாதிப்புக்களை எதிர்நோக்கினர்.

 குறிப்பாக வெள்ள அனர்த்தம் மண்சரிவு ஆகியவற்றினால் பல இலட்ச மக்கள் மிகவும் நிர்கதியான நிலையில் உள்ளனர் .பல மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் பலரின் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இது தொடர்பில் ஊடகங்கள் மூலம் நாட்டில் உள்ள அனைவரும் தகவல் அறிந்து கொண்டனர் .

.அரசியல் தலைவர்களில் சிலர் நேரடி விஜயங்கள் மேற்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரிடம் உறுதிமொழி அளித்துவிட்டுச் சென்றனர் .பாதிக்கப்படாத மக்கள் வெள்ள அனர்தத்தை குடும்பம் சகிதம் வந்து வேடிக்கையாக பார்த்து விட்டுச் சென்றனர் .இன்னும் சிலர் தமது முகநூலில் பதிவு செய்வதற்காக பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு  நிவாரண உதவிகள் செய்வதற்காக வந்து சென்ற அரச சார்பான மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் வழிகாட்டிய பிரமுகர்கள் தமது இனத்திற்கும் தமது உறவுகளுக்கும் மாத்திரம் உதவி செய்து விட்டுச் செல்கின்றனர் .

தேசிய அளவில் செயற்பட்டு வரும் முஸ்லிம் நிறுவனங்கள் இன்னும் பாதிப்புக்கள் தொடர்பாக புள்ளி விபரங்கள் திரட்டுவதற்கு இணைப்பாளர்களை நியமித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர் .

கடந்த   வருடம் புனித றமழான்  ஆரம்பிப்பதற்கு  சில நாட்களுக்கு முன்னர்  கொழும்பு கொலன்னாவ பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் மிக வேகமாக செயற்பட்ட பல முஸ்லிம் அமைப்புக்களும் , இஸ்லாமிய தஃவா அமைப்புக்களும் சர்வதேச இஸ்லாமிய தொண்டர் நிறுவனங்களும் மற்றும் முஸ்லிம் பெரியார்களும் இம்முறை இரத்தினபுரியில் வெள்ள அனர்த்தங்களுக்கு உள்ளாகி புனித ரமழானை தொடர்வதற்கு கூட வசதிகள் இன்றி கவலையுடன் முடங்கிக் கிடக்கும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் இன்னும் அவதானம் செலுத்துவதற்கு தாமதித்து வருவது பலருக்கும் பாரிய வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இரத்தினபுரி நகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான முஸ்லிம் வீடுகள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை.பலர் தொழுகை இன்றியும் நோன்பின்றியும் தமது இருப்பிடத்தை பிறரின் ஒத்துழைப்புக்கள் இன்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சிலர் தமது வீட்டில் எந்த வசதிகளும் இல்லை எனக்கூறி புனித இஸ்லாமிய கடமைகளை மேற்வதற்கும் மறுத்து வருகின்றனர் .

பொதுவாக வெள்ள அனர்தங்களின் போது எதிர்பார்க்காத சொத்து அழிவுகள் ஏற்படுவதும் பிறரின் உதவி ஒத்துழைப்புக்கள் இன்றி புதிய வாழ்க்கையை ஆரம்பிபதும்  உண்மையில் சிரமாக உள்ள போதிலும் இது தொடர்பில் இரத்தினபுரிக்கு வெளியில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் சமூகங்கள்  உரிய முறையில் அவதானம் செலுத்த தவறுவது மிகப்பெரிய இஸ்லாமிய சமூகப்   பலவீனம்   என்றே கருத வேண்டியுள்ளது .

இதனை வாசிக்கின்றவர்களுக்கு ஓர் உதாரணத்திற்காக மாத்திரம் இரத்தினபுரி நகரை மிக அன்மித்துள்ள வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள மஸ்ஜித்தொன்று இன்னும் யாராலும் துப்பரவு செய்யப்படாத நிலையை குறிக்கிறது.

இரத்தினபுரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக கேட்டு அறிந்துகொண்ட சில அழிவுகள்
1.வீட்டுப் பொருட்கள் அழிவு
2.சமயலறை உபகரணங்களை மீளப் பயன்படுத்த முடியாத நிலை
3.வீட்டு மின்சாரத்தை மீள சரிப்படுத்த வேண்டிய நிலை
4,பாடசாலை புத்தகங்கள் , பாடக் குறிப்புகள் அழிவு
5.அரச ஆவணங்கள் அழிவு
6.மாணவர்களுக்கான உபகரணங்களின் அழிவு
7.செருப்பு/சப்பாத்துக்களின் அழிவு
8.ஆண்/பெண்/ சிறுவர் ஆடைகள் 
9.மின் குமிழ்கள் பாதிப்பு 
10.உணவுப் பொருட்கள் 
11.சுகாதார/  தூய நீர் பிரச்சினைகள் 
12.இஸ்லாமிய ஈமாணிய பலவீனங்கள்
மேற்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இரத்தினபுரி முஸ்லீங்கள் தொடர்பில் உங்களின் பணி எவ்வாறுள்ளது?எவ்வளவு அமையவுள்ளது?
மிகவும் இரகசிமான முறையில் உதவிபுரிந்து வரும் அனைவரையும் அல்லாஹ் கபூல் செய்வானாக.

0 கருத்துரைகள்:

Post a Comment