Header Ads



அதிகாரத்துவ நாடுகளின் போட்டியை, சாதகமாக்கும் சிறிலங்கா

சீனா, ரஸ்யா, ஜப்பான், இந்தியா போன்ற பிராந்திய அதிகாரத்துவ நாடுகள் கிழக்கு ஐரோப்பிய ஆசியப் பிராந்தியந்தின் ஊடாக தமது அரசியல் மற்றும் பொருளாதார இருப்பிடத்தை நிலைநாட்டுவதற்கு போட்டியிடுகின்றன. இவ்வாறான அதிகாரத்துவப் போட்டிக்குள் அகப்பட்டுத் தவிக்கும் சிறிய நாடுகளில் இத்தகைய அதிகாரத்துவ நாடுகள் முதலீடுகள், நிதி மற்றும் அபிவிருத்தி போன்ற உதவிகளை மேற்கொள்வதற்காக   ‘பல் திசை மூலோபாயத்தை’ பிரயோகித்து வருகின்றன.

ரஸ்யா, சீனா, தென்னாசியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள கசகஸ்தான் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். சோவியத் யூனியன் உடைந்த போது கசகஸ்தான்   பிரபலமாகப் பேசப்பட்டது. கசகஸ்தான், ரஸ்யாவின் கைப்பாவை நாடாக இருந்தது என்பதற்கும் அப்பால், தனது நாட்டில் அனைத்துலக அதிகாரத்துவ நாடுகள் பல பில்லியன்களை முதலீடு செய்ய வருமாறு கசகஸ்தான் அழைப்பு விடுத்தது.

சீனா தனது ஒரு அணை ஒரு பாதை திட்டத்தை அமுல்படுத்துவதற்காக பல அனைத்துலக நாடுகளில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆசியா, கிழக்கு ஐரோப்பா, ஆபிரிக்கா போன்ற பிராந்தியங்களில் கட்டுமான அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் சீனா பாரியதொரு அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்துவ நாடாக துரித வளர்ச்சியடைந்துள்ளது.

சீனாவின் இத்தகைய செல்வாக்கிற்கு உட்பட்ட நாடுகளில் சிறிலங்கா ஒன்றாகும். வரலாற்று ரீதியாக நோக்கில், சிறிலங்காவானது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடனேயே தொடர்ச்சியாக நெருக்கமான உறவைப் பேணிவந்துள்ளது. ஆனால் சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட நீண்ட கால உள் நாட்டு யுத்தமானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் சிறிலங்காவின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் போது சிறிலங்கா அரச தரப்பால் பல்வேறு போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சிறிலங்காவிற்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையாலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளாலும் போர்க் குற்ற மீறல்களைக் காரணங் காட்டி பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

அனைத்துலக சமூகத்தின் இந்த அழுத்தமானது சிறிலங்காவின் பூகோள அரசியல் பின்னணியில் எதிர்பாராத திருப்பத்தைக் கொண்டு வந்தது. தான் செய்த தவறுகளுக்காக சிறிலங்கா அனைத்துலக சமூகத்திடம் சரணடைவதற்குப் பதிலாக சீனாவிடம் உதவிக்கரம் நீட்டியது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட சிறிலங்காவிற்கு உதவுவதில் சீனா அதிக விருப்பங் கொண்டிருந்தது.

சிறிலங்காவிற்கு இராணுவ உதவியாக 37 மில்லியன் டொலரும், கடனாக 8 பில்லியன் டொலரும் சீனாவால் வழங்கப்பட்டது. அத்துடன் 269 ஹெக்ரேயர் பரப்பில்  1.4 பில்லியன் டொலர் செலவில் கொழும்பு நிதி நகரமும், ஆழ்கடல் துறைமுகம், அனைத்துலக  விமான நிலையம், துடுப்பாட்ட அரங்கம், மாநாட்டு மண்டபம், தொழிற்துறை வலயம் உள்ளடங்கிய அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் சீனாவால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறிலங்கா மீதான சீனாவின் இந்தச் செல்வாக்கானது இந்தியாவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவிற்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில் சிறிலங்காவிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியா முன்னர் ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனாலும் சிறிலங்கா மீதான தனது செல்வாக்கை நழுவவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவே தற்போது இந்தியாவானது திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஆர்வம் காண்பிப்பது போல் தோன்றுகின்றது.

தனது நாட்டில் கட்டுமானத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையிலுள்ள இந்தியாவானது தற்போது சிறிலங்காவில் 2 பில்லியன் டொலரை முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளது. பிந்திய சோவியத் யுகத்தில், ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளின் கட்டுமானத் திட்டம் மற்றும் போக்குவரத்துத் திட்டங்களுக்காக ஜப்பானால் 200 பில்லியன் டொலர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீனா தனது புதிய பட்டுப் பாதைத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக மிகத் துரிதமாக அனைத்துலக மயமாகி வரும் நிலையில் சீனாவின் இந்த வளர்ச்சியை முறியடிப்பதற்காக அனைத்துலக அதிகாரத்துவ நாடுகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் முதலீடு செய்ய வேண்டிய அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளன. ரஸ்யா, இந்தியா, யப்பான் போன்ற அதிகாரத்து நாடுகள் சீனாவின் இந்த நிலைப்பாட்டை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளன.

அதாவது மூன்றாந் தரப்பு நாட்டில் தாம் முதலீடு செய்யாவிட்டால் சீனா முதலீடு செய்யும் என்பதை இந்த நாடுகள் நன்கு அறிந்துள்ளன. அதிகாரத்துவ நாடுகளின் புதிய போட்டியில் கசகஸ்தான், சேர்பியா, பங்களாதேஸ், சிறிலங்கா போன்ற நாடுகள் நலன் பெறுகின்றன. சீனா தனது பட்டுபாதைத் திட்டத்தின் பெரும்பகுதியை தமக்காகவே அமுல்படுத்துகிறது என இந்த நாடுகள் நோக்குகின்றன.

ஆங்கிலத்தில் – Wade Shepard வழிமூலம்       – Forbes மொழியாக்கம் – நித்தியபாரதி

No comments

Powered by Blogger.