May 23, 2017

முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியைச் சந்திக்க, நேரம் பெற்றுத்தர தயார் - அஸ்வர்

பாராளுமன்றத்திலுள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நேரம்பெற முடியாவிடின் எல்லோரும் கையொப்பமிட்டு ஒரு கடிதத்தை தன்னிடம் தந்தால் ஜனாதிபதியிடம் தான் நேரத்தைப் பெற்றுத் தருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

தொடராக இடம்பெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாம் பாராளுமன்றத்திலுள்ள 21 முஸ்லிம் பிரதிநிதிகளிடமும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்வது, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, எல்லோரும் ஒன்றாக ஜனாதிபதியிடம் சென்று இதற்குரிய பரிகாரத்தைத் தேட முடியாது என்றால் அதற்கு பல சொந்தக் காரணங்கள் இருப்பின், நீங்கள் 21 பேரும் ஒப்பமிட்டு எனக்கு ஒரு மகஜரைத் தாருங்கள் நான் ஜனாதிபதியிடம் சென்று உங்களுக்கு நேரம் எடுத்துத் தருகின்றேன்.

இது மிகவும் முக்கியமான விடயம்.  ஏனென்றால் இன்று சமுதாயமட்டத்தில் ஏனைய இயக்கங்களெல்லாம் தங்களுடைய குரல்களை எழுப்பி வந்தாலும் பிரதானமாக அரசாங்க மேலிடத்துக்குச் சொல்ல வேண்டியவர்கள் பாராளுமன்றத்திலுள்ளவர்கள்.  எனவே, தற்போது நிகழ்கின்ற மிகவும் பயங்கரமான, சரித்திரத்திலே ஏற்படாத சூழ்நிலையை கருத்தில் எடுத்து இதற்குரிய பரிகாரத்தை உடன் தேடுங்கள்.

நீங்கள் உடனடியாக கையொப்பமிட்டு மகஜரை என்னிடம் இன்றே தாருங்கள். இல்லாவிட்டால் ஜனாதிபதியும்  பிரதம அமைச்சரும் தனது வெளிநாட்டுப்பயணங்களை,  இங்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அவர்கள் ஆயாசமாக மேற்கொள்வார்கள். இந்த நாட்டு பிரச்சினைகளை வேறு நாட்டு மகாராணியிடம் முறையிடவா அல்லது  வேறு நாட்டு தலைவரிடம் முறையிடவா? நாங்கள் இந்த நாட்டு பிரஜைகள். இந்த நாட்டுப் பிரச்சினைகளை எமது தலைவர்களிடம்தான் முறையிடலாம்.  இந்த நாட்டு பிரஜைகளினுடைய பிரச்சினைகளை இந்த நாட்டு தலைவர்கள்தான் சரி செய்யவேண்டும். அது அவர்களுடைய முக்கிய தலையாய கடமை.

விரும்பியோ, விரும்பாமலோ இந்த நாட்டு முஸ்லிம்கள்  மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வாக்களித்தனர். இந்த நாட்டு ஒற்றுமைக்காக வேண்டி ஆண்டாண்டு காலமாக உழைத்த, ஈழத்துக்கு உடன்படாமல் பிரபாகரனால் இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்டு துன்பம், துயரங்களுக்கு ஆளான ஒரு சமுதாயத்தின்  பாதுகாப்பினை உறுதிசெய்து தருவது ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய தலையாய கடமையாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான துவேசம் இன்று அனல் கக்கியுள்ளது. முஸ்லிம் விரோத சக்திகளுடைய அடாவடித்தனம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்த நிலையில் இன்று முஸ்லிம் கிராமங்களில் வாழ்கின்றவர்கள் மற்றும் பல கிராமங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொலிஸிடம் பாதுகாப்பைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். அங்குமிங்கும் அலைந்தோடி அவர்களுடைய பள்ளிவாசல்களையும் ஊர்களையும் இருப்பிடங்களையும் பாதுகாப்பதற்காக வேண்டி அவர்கள் பிரயத்தனம் செய்கின்றனர்.

 ஏன் இப்படி நடக்க வேண்டும்? முஸ்லிம்களுக்கு விரோதமாக மஹிந்த ராஜபக்ஷ செயல்பட்டார் என்ற காரணத்தைக்காட்டி; அதனையே தன்னுடைய முக்கிய பிரச்சினையாகக் காட்டி 95 வீதமான முஸ்லிம்களுடைய வாக்குகளை இந்த நல்லாட்சி அரசு பெற்றுக் கொண்டது. ஆனால் இன்று நடப்பது சரித்திரத்திலே நடக்காத ஒரு விடயம். வெளிநாட்டிலுள்ள முஸ்லிம்களுடைய தொலைபேசி அழைப்புகள் மீண்டும் அலறத் தொடங்கியுள்ளன. எமக்கும் கூட இரவு நேரங்களில் தூங்க முடியாதுள்ளது. அவ்வளவுக்குத் தொலைபேசி என்ன நடக்கின்றது, என்ன நடக்கின்றது என்று.  

இந்தியாவில் நடக்கின்ற ஐ.பீ.எல் 20:20 கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் சரிவது போன்று ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுடைய கிராமங்களில் பிரச்சினைகள் நடந்துவருகின்றன.  முஸ்லிம்களுக்குதான் இவை நடக்கின்றன என்று சும்மா இருந்தால், அதாவது அடுத்த வீடுதான் எரிகின்றது என நாம் சும்மா இருந்தால் தன்னுடைய வீடும் தீப்பற்றி எரியும் என்பதுபற்றி  அரசாங்க மேலிடத்திலுள்ளவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அத்துடன் முஸ்லிம்கள் தங்களுடைய ஈமானைப் பலப்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு நேரத் தொழுகையிலும் குனூத் ஓதி,  தங்களுடைய பாதுகாப்புக்காகவும் இருப்புக்காகவும் வல்ல இறைவனிடம் துஆச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் - என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

2 கருத்துரைகள்:

WEll said sir.we respect you sir.
Your good srilankan sirrr.

He could not take time with Mahinda at the time of Aluthgama.. If he agrees that was a mistake and then his call can be considered respectable and answerable.

Post a Comment