Header Ads



2 மாகாண சபைகளில் ஆட்சிமாற்றம் ஏற்படுமா..? தீவிர முயற்சியில் மஹிந்த

மத்திய மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. ஆட்சி மாற்றம் செய்வது குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. மாகாண அமைச்சராக கடமையாற்றிய பிரமித பண்டார தென்னக்கோன் பதவியை ராஜினாமா செய்ததனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரமித பண்டாரதென்னக்கோன் உள்ளிட்ட 11 மாகாணசபை உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்து வந்த எட்டு மாகாணசபை உறுப்பினர்கள் நிலையான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாதிருக்கின்றனர். மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 40 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.

தற்போதைய நிலைமையின் அடிப்படையில் இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆக வீழ்ச்சியடையக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மஹிந்த ஆதரவு தரப்பு மாகாணசபையில் சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளனர்.

இந்தக்குழுவிற்கு பிரமித பண்டார தென்னக்கோனை தலைமை தாங்க அனுமதிப்பதற்கு அந்தக்குழுவின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மத்திய மாகாணசபையில் ஆட்சி மாற்றம் செய்ய முடியாது என முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடியான நடவடிக்கையாலும், மஹிந்த அணியின் பதிலடியாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆளுகையின் கீழுள்ள வடமத்திய மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது.

இதனால், மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குரிய நடவடிக்கையில் மஹிந்த அணி தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையில் மைத்திரி தரப்பும் முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது.

மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டுவந்த வடமத்திய மாகாண அமைச்சர் கே.எச்.நந்தசேனவை தூக்கிவிட்டு, அப்பதவிக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.ஹேரத் பண்டாவை ஜனாதிபதி நியமித்தார். ஆளூநர் முன்னிலையில் ஹேரத் பண்டா பதவிப் பிரமாணமும் செய்துகொண்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து - பதிலடி கொடுக்கும் வகையில் மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்பட்டு வந்த குறித்த மாகாண சபையின் மற்றுமொரு அமைச்சரான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்குரிய முயற்சியில் இறங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருபவர்களிடமிருந்து பதவிகளைப் பறித்து வருகின்றார். இதன் ஓர் அங்கமாகவே வடமத்திய மாகாண அமைச்சராக இருந்த நந்தசேன அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு அடுத்தப்படியாக எஸ்.எம்.ரஞ்சித் சமரகோனையும் நீக்குவதே ஜனாதிபதியின் திட்டமாக இருந்தது.

எனினும், ரஞ்சித் தானாக முந்திக்கொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன் என்ற பாணியில் பதவியைத் துறந்துள்ளார். இதனால் வடமத்திய மாகாண சபையின் அரசியல் களம் ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது. மஹிந்தவின் சகாக்கள் கூட்டாக இணைந்து மைத்திரி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகி வருகின்றனர்.

"வட மத்திய மாகாண சபையில் மொத்தமாக 33 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர். பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவின் பிரகாரமே மாகாண முதல்வர் தேர்வு இடம்பெறவேண்டும். எனவே, விரைவில் ஆளுநரிடம் மனுவொன்று கையளிக்கப்படும்.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தனது கோட்டையான வடமத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி மாற்றங்களைச் செய்தார். தனது விசுவாசியான பேசல ஜனரத்னவுக்கு முதல்வர் பதவியைக் கொடுத்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மீண்டும் ஆட்சி ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.