Header Ads



'முஸ்லிம் பிரதிநிதிகள், பேசிவிட்டு அடங்கி விடுகிறார்கள்'

"நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேருமே ஆளும் கட்சியில்தான் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள். அளுத்கம சம்பவம் நடந்து 33 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் முறையான நஸ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு இவர்களால் முடியவில்லை. அதற்காக முயற்சிக்கவுமில்லை. ஆனால் இவர்கள் அங்கம் வகிக்கும் அமைச்சரவை மூலமாக ஏனைய பல பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவாறான நிவாரணங்கள் வழங்கப்பட்டிள்ளன. அதே வேளை சகோதர தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதி நிதிகள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டேதான் தமக்கான அத்தனையையும் சாதித்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால் ஆளும்கட்சியில் இருந்தும் கூட ஏன் முஸலிம் பிரதிநிதிகளால் சாதிக்க முடியாமல் போகிறது..? "  என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

 தற்போதைய அரசாங்கத்தில் தீர்க்கப்படாமல் தொடரும் முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

 "முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவருமே ஆளும் கட்சியிலேதான் இருக்கிறார்கள். எனினும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் எவற்றுக்குமே இதுவரை தீர்வு கிடைத்ததாக இல்லை. பிரச்சனைகள் வருகின்ற போது அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறார்கள். கண்டனம் தெரிவிக்கின்றார்கள், பின்னர் அனுதாபம் தெரிவிக்கின்றார்கள். அத்தோடு எல்லாம் முடிந்து விடுகிறது. பிரச்சனைகளும் மறந்து போய் விடுகின்றன. பின்னர் மீண்டும் ஒரு புதிய பிரச்சனை உருவாகிறது. அப்போது மீண்டும் தமது வழமையான பாணியிலேயே முஸ்லிம் பிரதிநிதிகள் பேசி விட்டு அடங்கி விடுகிறார்கள். 

 கடந்த சில மாதங்களில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்களைப் பார்க்கின்ற போது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் சமூகப் பொறுப்பற்ற கையாலாகாத்தனம் அம்பலமாகின்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்த அமைச்சரவைக் கூட்டத் தீர்மானப் பதிவுகளைப் பார்க்கின்ற போது ஏனைய சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறு தங்களது கடமைகளைச் செய்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

 நமது மக்கள் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயமும் இருக்கிறது. ஆளும் கட்சியில் இருப்பது மாத்திரமே நமது மக்களுக்குப் பாதுகாப்பானது; நமது மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் என்ற ஒரு பிழையான தோற்றப்பாட்டை இந்த அரசியல் வாதிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  மக்களுக்கான தீர்வுகளை வென்றெடுப்பதற்காகவன்றி தமக்கான சுகபோகங்களுக்காகவே ஆளும் கட்சியில் இருக்க நமது பிரதிநிதிகள் வரும்புகின்றார்கள் என்பதனை இப்போதாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 
ஏனெனில், சகோதர சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதி நிதிகள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டேதான் தமக்கான அத்தனையையும் சாதித்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையினை அவ்வளவு இலேசாக மறந்து விட முடியாது .  ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் அத்தனை பேரும் ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பதென்பது நமக்குப் பாதுகாப்பானதல்ல என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். 
எனவே, இத்தருணத்திலாவது தமது அடிப்படைக் கடமைகளைச் செய்யத் தவறும் அரசியல் வாதிகள் பற்றி சுட்டிக்காட்டுவதற்கும், தட்டிக் கேட்பதற்கும் முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும். இதில் முஸ்லிம் ஊடகங்களுக்கு பிரதான பங்கிருக்கிறது. அதை அவர்கள் செய்ய முன்வர வேண்டும். அதுபோலவே நமது சமூகத்தில் படித்தவர்களும், இளைஞர்களும் இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு சமூகத்தை விழிப்பூட்டி புதியதொரு அரசியல் பாதையில் வழி நடாத்த ஒன்றினைய வேண்டும்"

No comments

Powered by Blogger.