Header Ads



இமான் அஹ்மட், அபூதாபி செல்கிறார்

உலகிலேயே மிக அதிக எடை கொண்டதாக நம்பப்படும் எகிப்திய பெண், இந்தியாவில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

சுமார் 500 கிலோ எடையுடன் எகிப்தில் இருந்து மும்பை சைஃபீ மருத்துவமனைக்கு எடை குறைப்பு சிகிச்சைக்காக வந்த இமான் அப்ட் எல் அடி, தற்போது, சிகிச்சைக்குப் பிறகு 172 கிலோவாகக் குறைந்திருப்பதாக மருத்துவமனை கூறுகிறது.

ஆனால், மருத்துவர்கள் பொய் சொல்வதாகவும், அவர் அதே மருத்துவமனையில் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவரது சகோதரி கோருகிறார்.

அங்கு அவருக்கு இரண்டாம் நிலை ஃபிஸியோதெரபி அளிக்கப்படும் என்றும், இமான் மற்றும் அவரது குடும்பத்தாரின் இல்லத்துக்கு அருகில் அந்த மருத்துவமனை உள்ளது என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

தனது மருத்துவர் குழு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பெருமையடையவதாக சைஃபீ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தனியாக, சரக்கு விமானத்தில் வந்த இமான், இப்போது சிகிச்சைக்குப் பிறகு பயணிகள் விமானத்தில் முதல் வகுப்பில் அமர்ந்து பயணிக்க இருப்பதாகவும் மருத்துவமனை சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, இமானின் சகோதரி வெளியிட்ட ஒரு காணொளிப் பதிவில், தனது சகோதரி இன்னும் பேசவோ, நகரவோ முடியாத நிலையில் இருப்பதாகவும், மருத்துவர்கள் சொல்வதைப் போல அவருக்கு பெரிய அளவில் எடை குறையவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

மருத்துவமனை நிர்வாகம் அதை கடுமையாக மறுத்திருந்தது.

உடல் பருமன் சிகிச்சை நிபுணர் டாக்டர் முஃபி லக்டாவாலா, இமானின் சகோதரி தெரிவித்த குற்றச்சாட்டை ட்விட்டர் செய்தியில் மறுத்திருந்தார். "ஷைமா செலிம், நீங்கள் மனிதநேயத்தைக் கொன்றுவிட்டீர்கள். உங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். நீங்கள் என்ன செய்திருக்கீறீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். நான் தொடர்ந்த சிகிச்சை அளித்து, இமானுக்காக பிரார்த்தனை செய்வேன்," என்று தெரிவித்திருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிபிசியிடம் பேசிய ஷைமா செலிம், தனது சகோதரிக்கு இன்னும் பெரும்பாலான நேரங்களில் ஆக்ஸிஜன் செலுத்தப்படுவதாகவும், குழாய் மூலம் உணவு செலுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

தனது சகோதரியை எகிப்துக்கு அழைத்துச் சென்றால், சிகிச்சை தேவைப்பட்டால் அதைக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் மும்பை மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இமானுக்கு 11 வயதில் பக்கவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு, 25 ஆண்டுகளாக கடுமையான உடல் பருமன் காரணமாக வீட்டை விட்டு வெளியே முடியாத நிலையில் இருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் சிறப்பு விமானம் மூலம் அவர் மும்பை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். இமான் தற்போது வீல் சேரில் அமர முடியும் என்றும், நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் எப்படியிருக்கிறார் என்ற புகைப்படங்களையும் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.