Header Ads



தெற்கில் உள்ள சிங்கள தீவிரவாதிகள் தொடர்பாக, அலட்டிக்கொள்ள வேண்டாம் - ஜயம்பதி விக்கிரமரட்ண

மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர்களுக்கு, ஆளுநர்களுக்குள்ள அதிகாரங்களை வழங்குவதனால் பிரிவினைக்கு வழிவகுக்கும் என தென்னிலங்கையில் உள்ள சிலர் கூறுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். ஆதனால் மாகாண சபைகள் பிரிவினை போக்கில் செயற்பட்டால் அதில் மத்திய அரசாங்கம் தலையிடும் வகையில் புதிய அரசியலமைப்பில் சரத்து ஒன்றை சேர்க்க நினைத்தோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

செல்வ நாயகத்தின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் தந்தை செல்வா சதுக்கத்தில் நேற்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நினைவு பேருரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

பொலிஸ் அதிகாரங்களை தாருங்கள் எனவும், தேசிய கொள்கைகள் வகுக்கப்படும்போது அதில் மாகாண சபைகளையும் பங்காளிகளாக மாற்றுங்கள். அப்போதே அந்தக் கொள்ளை எங்களுடைய கொள்கையாகவும் இருக்கும் என குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறான நிலையில் தெற்கில் உள்ள சிலர் ஆளுநருக்குள்ள அதிகாரங்களை முதலமைச்சருக்கு வழங்குவது பிரிவினைக்கு வழிவகுக்கும் என கூறுகின்றார்கள்.

ஆனால் அதிகாரத்தை கொடுப்பதால் யாரும் பிரிவினையை கேட்பதில்லை. வரலாற்று ரீதியான பின்னணியிலேயே பிரிவினை கோருக்கின்றார்கள். அந்தவகையில் இந்த அச்சம் நியாயம் இல்லாத ஒன்றாகும். ஆனாலும் இந்த அச்சத்திற்கு நாங்கள் முகம் கொடுக் க வேண்டும். அவர்களுக்கு தெளிவை வழங்கவேண்டும். தெற்கில் உள்ள இனவாதிகள் தொடர்பாகவும், சிங்கள தீவிரவாதிகள் தொடர்பாகவும் அலட்டி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மனதார மாற்றத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டும். அதேபோல் அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்தில் மாகாண சபைகள் பிரிவினை நோக்கில் செயற்பட்டால் அதில் மத்திய அரசாங்கம் தலையிடலாம் என்றவாறாக ஒரு சரத்தை புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் சேர்த்து கொள்வதற்கு யோசித்தோம்.

ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்க்கிறது. பிரிவினை என்ற சொல்லை பயன்படுத்தி கொண்டு மாகாண சபை விடயங்களில் மத்திய அரசாங்கம் தான்தோன்றிதனமாக தலையிடுவதற்கு அது வழிவகுக்கும் என அவ ர்கள் கூறுகின்றார்கள் .

இதேபோல் அரசியலமைப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க நாங்கள் முன்மொழிந்துள்ளோம். அது விரைவாக அரசியல்யாப்பு தொடர்பான தனது முடிவை சொல்லும்.

இதேபோல் எமக்கு இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் மிக பெறுமதியானது. இவ்வாறான சந்தர்ப்பம் மீள எப்போது கிடைக்கும் என்பதை என்னால் சொல்ல இயலாது.

மேலும் பெரும்பான்மையுடன் அரசியலமைப்பை நிறைவேற்றும் சந்தர்ப்பமும் இப்போது இருக்கின்றது. இந்நிலையில் இரு பக்கத்திலும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்க்கிறவர்கள் உள்ளார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.