Header Ads



ரணிலுக்கு பகல் சாப்பாடு, கொடுக்கிறார் மோடி - இன்று முழுவதும் முக்கியபேச்சு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ள நிலையில், இன்று இந்தியத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திரா காந்தி விமான நிலையத்தை நேற்று மாலை சென்றடைந்தார்.

அவரை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரா, இந்திய வெளிவிவகார அமைச்சின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் வர்மா உள்ளிட்ட இராஜதந்திரிகள் வரவேற்றனர்.

சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க 2015இல் பொறுப்பேற்ற பின்னர் புதுடெல்லிக்கு மேற்கொண்டுள்ள மூன்றாவது பயணம் இதுவாகும்.

ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்கு அரசுமுறை மற்றும் அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொண்டிருந்தார். ஆனால் இது பணிநோக்குப் பயணமாகும்.

வரும் சனிக்கிழமை வரை இந்தியாவில் தங்கியிருக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று மட்டும் புதுடெல்லியில் இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

ஹைதராபாத் இல்லத்தில் இன்று மதியம் 1 மணியளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார். மதியபோசன விருந்துடன் இந்த பேச்சுக்கள் இடம்பெறும்.

அதேவேளை, இன்று காலையிலும் மாலையிலும், ரணில் விக்கிரமசிங்க தங்கியுள்ள தாஜ் பலஸ் விடுதியில், பல முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ்,  மத்திய தரைவழிப்போக்குவரத்து, கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.

அதேவேளை, நேற்று மாலை புதுடெல்லியை வந்தடைந்த சிறிலங்கா பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவை, பாஜகவின் பொதுச்செயலர் ராம் மாதவ் மற்றும் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னாள் உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

No comments

Powered by Blogger.