Header Ads



பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா எங்கே..?

- நவாஸ் -

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு தடுக்கப்பட்டமையினையடுத்து, பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா கடந்த சில வாரங்களாக பிரதேச செயலகத்துக்கு வருகை தருவதிலிருந்தும் தவிர்ந்து வருகின்றார்.

சமூக அக்கறையும், நேர்த்தியான நிருவாக சேவை அனுபவத்தினையும் கொண்ட பிரதேச செயலாளர் ஹனீபாவின் இந்த இடைக்கால சேவை இழப்பு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் புதிய கட்டிடமொன்று சில வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்படவிருந்தது. அந்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பெயர் இடம்பெறவில்லை எனத் தெரிவித்து, அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, குறித்த திறப்பு விழா நடைபெறவில்லை.
குறித்த அழைப்பிதழில் அதிதிகளாக யாரையெல்லாம் பெயர் குறிப்பிடுவதென்பதை, நிருவாக அமைச்சின் அதிகாரிகளே தீர்மானித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மேற்படி நிகழ்வுக்கு பொது நிருவாக அமைச்சர் பிரதம அதிதியாக வருகை தரவிருந்த நிலையில், கோடிக்கணக்கான நிதியினை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, விழா நடைபெறாமல் தடைப்பட்டது.

குறித்த திறப்பு விழாவுக்கு எதிராக அமைச்சர் நசீரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமை, அதனால் விழா நடைபெறாமல் போனமை காரணமாக, மனக் கசப்படைந்த நிலையிலேயே அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வருகை தராமல் தவிர்ந்து வருகின்றார் என அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனையில் ஐ.எம். ஹனீபா பிரதேச செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், சாய்ந்தமருது பிரதேச செயலாளராகவும் பதில் கடமை புரிந்து வந்தார்.

தற்போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வருகை தருகின்றமையினை தவிர்த்துக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் ஹனீபா, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் முழு நேர கடமையில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது, உதவிப் பிரதேச செயலாளரின் நிருவாகத்தின் கீழேயே, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது.

மக்களுடன் மிகவும் நட்புறவுடனும், சமூக அக்கறையோடும் நடந்து கொள்ளும், சிரேஷ்ட நிருவாகியான பிரதேச செயலாளர் ஹனீபாவின் இந்த தற்காலிக சேவையிழப்பு குறித்து, அட்டாளைச்சேனை மக்கள் பெரிதும் கவலை தெரிவிப்பதோடு, வழமைபோல் சேவைக்குத் திரும்புமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.

பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபாவின் பதவிக் காலத்தில், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.