Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில், பார்வையற்ற முதல் பட்டதாரி மாணவி

-சந்திப்பு : அனஸ் அப்பாஸ் 
தொகுப்பு: மிப்றாஹ் முஸ்தபா-

அங்கவீனர்களால் எதுவுமே செய்ய முடியாது. அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றிருந்த காலம் மலையேறிவிட்டது. அங்கவீனம் என்பது ஒரு  இயலாமை அல்ல. கண்பார்வை அற்ற மாணவர்களாலும் முன்னேற முடியும். சாதாரண மாணவர்களோடு சரிசமமாக அவர்களாலும் கற்றலில் ஈடுபட முடியும் என்ற தன்னம்பிக்கை மிக்க வார்த்தைகளை எம்மோடு பகிர்ந்து கொள்கிறார், இம்முறை நடைபெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலைத்துறையில் பட்டம் பெற்று வெளியாகிய கண்பார்வையற்ற மாணவி பாத்திமா ஸனூரியா.

கண்பார்வையுள்ள பலர் குருடர்களாக வாழும் இவ்வையகத்தில் கண்பார்வையற்ற ஒரு மாணவி பல்கலைக்கழகப் படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கிறார் என்பது பெரியதொரு சாதனை தான். அவர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர். அவர் இந்த சமூகத்தின் ஒரு சாதனைப் பெண்மணி. அவர் அங்கவீனர்களுக்கு மட்டுமல்ல முழு இளைஞர், யுவதிகளுக்குமான முன்னுதாரணம்.

தந்தை இல்லாத குடும்பத்தில் வளர்ந்த பாத்திமா ஸனூரியாவுக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். 1988 ஆம் ஆண்டு மாவனல்லை உயன்வத்தை பிரதேசத்தில் பிறந்தவர். கண்பார்வை அற்ற காரணத்தினால் ஆரம்பத்தில் இவரை யாரும் பாடசாலையில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனைய மாணவர்களுக்கு இணையாக இவரால் படிக்க முடியாது என தட்டிக்கழித்து விட்டார்கள். என்றாலும் இரண்டு வருடங்கள் கழித்து தெல்கஹகொட முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு பாத்திமா ஸனூரியாவுக்கு கிடைத்தது.

இவ்வாறு கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைப்பதற்கான காரணம் அப்பாடசாலையில் கற்பித்துக் கொடுத்த ஹபீலா ஆசிரியையின் அர்ப்பணம் மிக்க சேவையாகும். கண்பார்வையற்ற ஸனூரியாவுக்கு இந்த ஆசிரியை 3 வருடங்கள் தனியாகக் கவனமெடுத்து கற்பித்தமைதான் இன்று அவர் பட்டப் படிப்பை பூர்த்தி செய்வதற்கு அடித்தளமாய் அமைந்தது.

தரம் 6 தொடக்கம் 11 வரை திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் தனது கல்வியைத் தொடர்ந்த பாத்திமா ஸனூரியா இங்குதான் கண்பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்து முறையை பயின்று கொண்டார். இதனால் அவர் தொடர்ந்தும் கல்வி நடவடிக்கைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவதற்கு உதவியாக அமைந்தது.

க.பொ.த உயர்தரத்தை மாவனல்லை உயன்வத்த நூராணியா மகா வித்தியாலயத்தில் கற்று, 2011/12 வருடத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். இவரோடு சேர்த்து இன்னுமொரு கண்பார்வையற்ற மாணவரும் முதற் தடவையாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ்வருடத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தனது பல்கலைக்கழக வாழ்க்கை தொடர்பில் மனம் திறக்கும் பாத்திமா ஸனூரியா, பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்புக்களை ஒருபோதும் மறக்க முடியாதெனவும், இவர்களது பெறுமதியான உதவிகள்தான் தன்னை இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

குறிப்பாக பரீட்சைக்குத் தயாராகும்போது நண்பர்கள் பாடக் குறிப்புகளை வாசித்து தனக்கு விளங்கப்படுத்தியமையானது பெரும் உதவியாக அமைந்ததாக நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார். இன்ஷா அல்லாஹ் ஒரு சிறந்த ஆசிரியையாக மாற வேண்டும் என்பதை தனது இலட்சியமாகக் கொண்டுள்ள பாத்திமா ஸனூரியா, நான் கற்ற கல்வியை பிறருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் தன்னால் சாதாரண பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுக்க முடியும் எனவும் நம்பிக்கையோடு குறிப்பிடுகிறார்.

இறுதியாக, மிகவும் கஷ்டப்பட்டு தன்னை இந்தளவுக்கு ஆளாக்கிய தனது தாய், சகோதரிகள், உறவினர்கள், ஹபீலா ஆசிரியை, திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் ஜிப்ரி ஹனீபா உள்ளிட்ட ஆசிரியர்கள், தனக்குக் கற்பித்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், நண்பர்கள், தனக்கு உதவி செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கும் பாத்திமா ஸனூரியா, அவர்களுக்காக என்றும் தான் பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

பல கஷ்டங்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட சவால்களை எல்லாம் முறியடித்து இன்று சாதித்துக் காட்டியிருக்கின்ற பாத்திமா சனூரியாவை நாமும் வாழ்த்துகின்றோம்.

8 comments:

  1. Maasha Allah. Allah always with disadvantaged.

    ReplyDelete
  2. கேட்பதர்க்கு இலகு போல் தெரியலாம்.இது இமாலய சாதனைக்கு ஒப்பானது.நாங்களும் வாழ்த்துகிறோம்; பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  4. Masha Allah, God bless sister

    ReplyDelete
  5. Masha Allah. Such a big achievement! May Allah give you a bright future. Ameen

    ReplyDelete

Powered by Blogger.