Header Ads



ஜெனிவா தொடர்பில் அரசாங்கத்திற்குள் முரண்பாடு - அங்கு விரைகிறார் ஹர்ஷ டி சில்வா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தொடர்பாக அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தின் தொடர்ச்சியாக, இந்தமுறை முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, இணை அனுசரணை வழங்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு, அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

‘இது சிறிலங்கா அரசாங்கம் இழைத்துள்ள இராஜதந்திர தவறாகும். ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதற்கான முடிவை எடுப்பதற்கு முன்னர், அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.

இதற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய தொடர்ந்து குரல் கொடுக்கும். பரிந்துரைகளை இலகுவாக நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, அரசாங்கம் வாக்குறுதி அளிக்கக் கூடாது.

உதாரணமாக, கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்த முடியாது. உலகின் ஏனைய எந்த நாட்டிலும் இல்லாத முன்னுதாரணத்தை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு, அனைத்துலக நாடுகள் முயற்சிக்கக் கூடாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

2

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் போது, சிறிலங்கா அரசதரப்பு குழுவுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்துள்ள அறிக்கை மீதான விவாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, வரும் மார்ச் 23ஆம் நாள், சிறிலங்கா தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, சிறிலங்கா குழுவுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை தலைமை ஏற்குமாறு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவே, தலைமை தாங்குவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை ஜெனிவா செல்லுமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.