Header Ads



யார் அந்த அந்நியர்கள்..?

அல்லாஹ்வின் தீனிலிருந்து விலகி, உலகம் வழிகேட்டின்பால் அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வழிகெட்ட மனிதர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக மதிக்கப்பட்டும், நேர்வழியிலுள்ளோர் வழிகேடர்களாக நோக்கப்பட்டும், பொய்யர்களின் கூற்று உண்மைப்படுத்தப்பட்டும், உண்மையாளர்களின் கூற்று இலகுவில் பொய்யாக்கப்பட்டும் விடுகின்றன. இத்தகைய புதுமையான யுகத்தில் தம் முன்னால் காணும் முரண்பாடுகளைப்பார்த்து புத்திஜீவிகளும் குழம்பிப்போயுள்ளனர்.

அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றக் கூடிய மக்கள், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில், ஒரு விதமான உணர்வு நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.அதாவது அவர்களுக்கும் அந்த குறிப்பிட்ட சூழலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது அல்லது அந்த இடத்தை விட்டு அல்லது அந்த சூழலை விட்டு வெளியேற நினைப்பது அல்லது தமக்கு விருப்பமில்லாத சூழலில் சிக்குண்டு கிடப்பதாக கருதுவது. இன்னும் சரியாக கூற வேண்டுமானால் அவர்களிலிருந்து வெளிப்பட்டு அந்நியமாக இருக்க விரும்புவது. இது சாதாரணமாக முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன் கலந்திருக்கும் பொழுது உணரலாம். ஆனால் சில நேரங்களில் சக முஸ்லிம் சகோதரர்களிடம் இருக்கும் பொழுதும் இது போன்ற சிந்தனைகள் ஆட்கொள்கின்றன.

ஒரு முஸ்லிம் தனது சகோதர சகோதரிகளை இஸ்லாத்திற்கு முரணான காரியங்கள் செய்வதை பார்க்கும் பொழுது அல்லது இறை நிராகரிப்பின்/இணைவைப்பின் பக்கம் அழைத்து செல்லும் அவர்களின் சில நூதன செயல்களை காணும் பொழுது, அவர்களை தடுக்கக்கூடிய அதிகாரமோ அல்லது ஆற்றலோ தம்மிடம் இல்லையே என்று ஏக்கப்படுவான். இத்தகையவர்களை நேர்வழியின் பக்கம் அழைக்க, தங்களுடைய கருத்துக்கு ஒத்த கருத்துள்ள அல்லது தங்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லாததைக் கொண்டு அவர்களுக்குள் ஒரு விதமான மனஅழுத்தம் ஏற்படுகின்றது. இத்தகைய சகோதர சகோதரிகள் (அல்லாஹ் அவர்கள் மேல் கருணை புரிவானாக) குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளைக் கொண்டு ஆறுதல் அடைந்து கொள்வார்களாக

உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்லச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்(11:116)

இந்த இறை வசனமானது, இந்த உலகில் மனித சமுதாயத்தை தீமையில் இருந்து தடுக்கும் சிலரை அதாவது மற்ற மக்கள் மத்தியில் மாற்றுக் கருத்துடைய அந்த அந்நியர்களை பற்றிப் பேசுகின்றது. இவர்களைப்பற்றி தான் இறை தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அந்நியர்கள்" என்று குறிப்பிட்டு அவர்களுக்கு சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள கீழ்வரும் ஹதீத் இந்தக் அந்நியர்கள் யார் என்பதை தெளிவுபடுத்துகிறது. "இஸ்லாம் அந்நியமான ஒன்றாகவே ஆரம்பித்தது. அது மீண்டும் அந்நியமானதாக மாறிவிடும். ஆகவே அந்த அந்நியர்களுக்கு (அதாவது இஸ்லாத்தை அந்நியமான ஒன்றாக மக்கள் பார்க்கும்போது இஸ்லாத்தை சுமப்பவர்கள்) சுபசோபனம் உண்டாகட்டும்"

இந்த சிறப்புக்குரிய மக்கள் அந்நியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் மனித சமுதாயத்தில் சிறுபான்மையாக உள்ளனர். எவ்வாறு முஸ்லிமானவர்கள் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துடன் ஒப்பிடும் பொழுது அந்நியர்களாக கருதப் படுகின்றார்களோ மேலும் உண்மையான இறை அச்சமுள்ள நம்பிக்கையுள்ளவர்கள் மற்ற முஸ்லிம்களோடு ஒப்பிடும் பொழுது அந்நியர்களாக காட்சி அளிக்கின்றனரோ அவ்வாறே நபிவழியை பின்பற்றி, மற்ற முஸ்லிம்களின் நூதன செயல்பாடுகளிலிருந்து விலகி இருப்பவர்களும் அந்நியர்களாக கருதப்படுகின்றனர் .

மக்கள் நேர்வழியிலிருந்து தவறி வெவ்வேறு பிரிவுகளாகவும் மதங்களையும் பின் பற்றும் பொழுது அல்லாஹ் தனது தூதர் மூலமாக அவர்களிடத்தில் நேர்வழியான இஸ்லாமைக் கொண்டு அனுப்பி வைத்தான் . அவர்கள் யூதர்களாகவும் கிருத்தவர்கலாகவும் இறை நிராகரிப்பவர்கள்ளகவும் இருந்த நிலையில் அவர்களிடத்தில் இஸ்லாம் அறிமுகம் செய்யப் பட்ட பொழுது அது அவர்களுக்கு ஒரு விதமான புது விதமாக அந்நிய மார்க்கமாகவே தோன்றியது . இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அந்நியமானவர்களாகவே கருதப் பட்டார்கள் . அவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டும் சமூகத்தை விட்டும் இன்னும் ஊரை விட்டும் நாட்டை விட்டும் ஒதுக்கப் பட்டார்கள் .

உண்மையில் இவர்கள் தங்களின் நம்பிக்கையிலோ அல்லது செயல் முறைகளிலோ அந்நியர்கள் அல்ல. மாறாக இவர்களை அந்நியர்களாக ஒருவித தோற்றத்தை ஏற்படுத்துவது இவர்கள் சிறுபான்மையாக இருப்பதனாலேயாகும்.

No comments

Powered by Blogger.