Header Ads



இலங்கை சிறுபான்மையினர் தொடர்பில், அரசாங்கம் அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் - றீட்டா

இலங்கை அரசாங்கம் இலங்கையின் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான உடனடியான மிக முக்கியமான வலுவான வேலைத்திட்டங்களை முன்வைப்பதில் தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் என சிறுபான்மை மக்கள் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ரீட்டா ஐசாக் நாடியா ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய -15- அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய றீட்டா ஐசாக் நாடியா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரியாற்றிய அவர், 

இலங்கைக்கு நான் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விஜயத்தை மேற்கொண்டேன்.

இதன்போது இலங்கை அரசாங்கம் எனக்கு பெற்றுக்கொடுத்த வசதிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய நல்லாட்சி அராசாங்கம் பாரிய எதிர்பார்ப்பு இலக்கு என்பவற்றை அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வெளிக்காட்டியுள்ளது.

தமிழ், முஸ்லிம், இந்தியத் தமிழர்கள் மற்றும் சிறு அளவிலான சிறுபான்மை மக்கள் திட்டமிடப்பட்ட சமூக மற்றும் அரசியல் ஓரங்கட்டுதலுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

விசேடமாக சிறுபான்மைப் பெண்கள் உண்மைக்கும் நல்லிணக்கத்துக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றனர். நான் இலங்கைக்கு சென்று ஐந்து மாதங்கள் கடந்து விட்டன.

இலங்கை அரசாங்கம் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான உடனடியான மிக முக்கியமான வலுவான வேலைத் திட்டங்களை முன்வைப்பதில் தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் என்று அன்று வலியுறுத்தினேன். அந்தச் செய்தியை மீண்டும் இன்று வலியுறுத்துகின்றேன்.

தமிழ், முஸ்லிம் சமூகங்களில் தாக்கம் செலுத்தும் விடயங்களான வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்களை அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றெடுக்கப்பட்ட தற்போதைய சந்தர்ப்பத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் மற்றும் நிலைமாறு கால நீதி நடவடிக்கைகள் இலங்கைக்கு எப்போதும் இல்லாதவாறான ஒரு சந்தர்ப்பத்தை கடந்தகால நிலைமைகளை ஆராயவும் நம்பிக்கையை கட்டியெழுப்பவும் வழங்கியிருக்கிறன.

குறிப்பாக அனைத்து இலங்கையர்களும் தாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உருவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி ஏற்படாத வகையில் சமத்துவம் நிறுவன ரீதியாகவும் சட்டரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களை பாதுகாப்பானவர்களாக உணர வைப்பது சமூகங்களுக்கிடையிலான பதற்றத்தை தணிக்க கருவியாக இருப்பதுடன் நல்லாட்சியினதும் சிறந்ததொரு அத்தியாவசிய காரணியாக அமையும்.

எனவே தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்காக நான் முன்வைத்த பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் தெளிவான குறிக்கோளுடனும் சிறந்த கட்டமைப்புடனும் கால அட்டவணையுடனும் அமுல்படுத்தும் என எதிர்பார்க்கின்றேன்.

விசேடமாக சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்கும் என நம்புகின்றேன் என ரீட்டா ஐசெக் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.