Header Ads



மலச்சிக்கல் சிறுநீரக பாதிப்பா

‘‘ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வலை போன்றதுதான் நம் உடல். உடலில் எங்கோ ஏற்படும் பிரச்னை வேறு ஒரு பெரிய பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கையே இந்த செய்தி. ஆம்... சாதாரணமாக நாம் நினைக்கும் மலச்சிக்கல் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிறப்பு மருத்துவர் சுகுமார்.

‘‘60 வயதுக்கு மேல் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களில் 13 சதவீதத்தினருக்கு சிறுநீரக பாதிப்பு இருக்கிறது. இதே பிரச்னையை மாறுபட்ட இன்னோர் கோணத்தில் பார்த்தால் சிறுநீரகம் செயல் இழந்தவர்களில் 50% மேலே  மலச்சிக்கல் இருக்கிறது. வயிறு உப்புசம், மயக்கம், ரத்த வாந்தி, ரத்த கசிவு, குடல் அடைப்பு, பெருங்குடலில் கட்டி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இவர்களுக்கு இருக்கும். பரிசோதனை செய்து பார்த்தால் உடலில் உப்பு சத்து, சோடியம், பொட்டாசியம் போன்றவை இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

உடலில் ரத்தத்தின் அளவு குறைதல், சிறுநீர் குறைவாக வெளியேறுதல், ரத்தக்கொதிப்பு அதிகமாக இருத்தல் போன்றவற்றோடு மலச்சிக்கல் இருந்தால் ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் மூலம் சிறுநீரகம் சரியாக வேலை செய்கிறதா என கண்டுபிடிக்க வேண்டும்.

உடலில் உப்புச் சத்தை சரியான அளவில் பராமரிக்கும்போது மலச்சிக்கல் கட்டுப்பாட்டுக்குள் வரும். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருவதும் அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள பீன்ஸ், அவரை போன்ற காய்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதன் மூலமும், புரதம் மற்றும் உப்பு அளவை உணவில் குறைப்பதன் மூலமும் கட்டுப்படுத்த முடியும். நோயாளியின் உடலில் உள்ள உப்புச் சத்தின் அளவைப் பொறுத்து மருத்துவர் ஆலோசனைப்படி தண்ணீர் குடித்து வர வேண்டும். அதனால் மலச்சிக்கல்தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது.’’

No comments

Powered by Blogger.