Header Ads



காத்தான்குடி தாக்குதலுடன் எனக்கு சம்பந்தம் இல்லை, பிரபாகரன் 10 வருடங்களாக என்ன செய்கிறார்..?

பிரபாகரன் கொல்லப்பட்டார் அதனை நானே உறுதிப்படுத்தினேன். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பது பொய்யான தகவல்களாகும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார்.

குறித்த நேர்காணலின் போது விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு,

நீங்கள் எப்போது புலிகளுடன் இணைந்தீர்கள்? விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தகர்களுக்கு சாதி பாகுபாடு இருப்பதாக கூறப்படுகின்றது உண்மையா?

1983 களில் இலங்கையில் ஜே.வி.பி பிரச்சினைகள் நடைபெற்றபோதே தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருப்பதை அறிந்து கொண்டேன். அதன் காரணமாகவே நான் புலிகளுடன் இணைந்தேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு சாதி பிரச்சினை இருக்கின்றது. ஆனால் எமக்கு இல்லை.

அரந்தலாவை, ஸ்ரீ மஹா போதி, காத்தான் குடி போன்ற எந்த தாக்குதலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை.

அரந்தலாவை தாக்குதலுக்கு குமரப்பா என்பவரே காரணம். ஆனால் அந்த தாக்குதல் தொடர்பில் பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. தாக்குதலின் பின்னர் தாக்குதல் மேற்கொண்டவர்களை அவர் தண்டித்தார். பொட்டுஅம்மன் போன்றவர்களும் தண்டிக்கப்பட்டார்கள்.

6 மாதங்கள் வரையில் இருட்டறையில் அடைப்பது போன்ற பல தண்டனைகள் கொடுக்கப்பட்டது.

அந்த தாக்குதலை மேற்கொண்டதற்கு பிரபாகரன் ஆணையிடவில்லை. ஸ்ரீ மஹா போதி தாக்குதல் தொடர்பில் எனக்கு தெரியாது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், சூசை போன்றவர்களுக்கு விருப்பம் இல்லை. அதுவே புலிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

தொடர்ச்சியாக மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரபாகரன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? ஆரம்பத்தில் தண்டித்தவர் தானே அவர் பின்னர் நடந்த தாக்குதல்களை அவர் எதிர்க்க வில்லையா?

ஆரம்பத்தில் பிரபாகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்தார். பின்னர் அவரது போக்கை மாற்றிக் கொண்டு விட்டார். விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பிரபாகரனே காரணம். அவருடைய நடவடிக்கைகள் காரணமாகவே புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இராணுவத்தினரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில்?

இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தினை செய்யவில்லை. பாலியல் குற்றங்களை புரிந்தது இந்திய இராணுவமே.

இந்திய இராணுவமே கேவலமான செயல்களை செய்தது. இலங்கை இராணுவம் அல்ல இதனை நான் உறுதியாக கூறுகின்றேன்.

ஒரு காலத்தில் புலிகளின் அமைப்பில் நான் இருந்தேன் என்பது தொடர்பில் இப்போது நான் வெட்கம் கொள்கின்றேன்.

நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதை யார் தெரியப்படுத்தியது?

மகிந்த ராஜபக்சவே அப்போது என்னை தொடர்பு கொண்டு பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுமாறு அனுப்பி வைத்தார். மே 18 அல்லது 19ஆம் திகதி காலை சரியாக நினைவில்லை.

அது பிரபாகரனின் உடல் என்று நிச்சயமாக கூறுகின்றீர்களா?

நான் 28 வருடங்கள் பிரபாகரனுடன் இருந்தேன். அதனால் எனக்கு தெரியும். அப்படியே பிரபாகரன் இருந்தால் 10 வருடங்களாக இன்னும் வராமல் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்? எங்கே இருக்கின்றார்.

அதனாலேயே அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதியாக கூறுகின்றேன். அங்கு இருந்தது பிரபாகரனின் உடலே எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.