Header Ads



ஜன்னா என்ற பட்டாம்பூச்சியை கண்டு, நடுங்கும் இஸ்ரேல்


'போரும், போராட்டமும் இறுதியில் அநாதைகள் ஆக்குவது என்னவோ குழந்தைகளைத்தான்' என்பார்கள். ஆனால், பல யுகங்களாகத் தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீனியப் போர், பத்து வயதாகும் ஜன்னா ஜிகாதை ஊடகவியலாளராக்கி இருக்கிறது. உலகின் மிகச்சிறிய பத்திரிகையாளர் ஜன்னாவாகத்தான் இருக்க முடியும். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் தொடர் தாக்குதல்களை உலகத்துக்கு, தான் எடுக்கும் காணொளிகள் வழியாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறாள் ஜன்னா. இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதியான நபி சலேதான் ஜன்னா ஜிகாத் இருப்பிடம். இத்தனைக்கும் அவளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் கிடையாது. பிறகு அவளுக்குள் எப்படி இப்படியொரு ஆர்வம் எழுந்தது?

"இஸ்ரேலியத் தாக்குதல்கள் பற்றி ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எழுதி வந்தாலும், அவர்கள் எப்போதும் உண்மையை எழுதுவதில்லை" என்கிறாள் ஜன்னா. அவளது உறவுமுறைத் தங்கை ஒருத்தியும், அவளது மாமாவும் இஸ்ரேல் தாக்குதலில் பலியானது, ஜன்னாவை மிகவும் பாதித்தது. இருவருமே எரிவாயு குண்டு வெடித்தும், துப்பாக்கியால் சுடப்பட்டும் பலியானார்கள். அதுவரை பட்டாம்பூச்சிகளை மட்டுமே தன் அம்மாவின் ஐ-போன் வழியாகப் படம் பிடித்துவந்த ஜின்னா, தனது பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக நிகழும் போராட்டம், தங்களுடைய மக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள், கைது, தனி மனிதத் தாக்குதல், பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல் என ஒவ்வொன்றாக வீடியோ பதிவு செய்யத் தொடங்கினாள். அவளது உறவினர் ஒருவர் பத்திரிகை புகைப்படக்காரராக இருப்பதும் ஒருவகையில் அவளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. தற்போது, இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஜோர்டான், ஜெருசலேம் ஆகிய பகுதிகளுக்கு தன் தாயுடன் படையெடுக்கிறாள் ஜன்னா. அவரது ஐ.போன்தான் இவளது ஆயுதம். ’கேமராதான் என் துப்பாக்கி’ என்கிறாள் ஜன்னா. சிறுமி என்பதால் அவளால் அப்படியென்ன செய்து விடமுடியும்? என்று நினைத்து அவளது கேமராவை இஸ்ரேலியர்கள் பறிப்பதில்லை. சில நேரங்களில் இவள் கேமிராவுடன் நெருங்கினால் வேகமாக அந்த இடத்தைவிட்டு நகருகின்றனர் இஸ்ரேலியர்கள். உருவத்தைக் கண்டு யாரையும் எடைபோட்டு விடக்கூடாது என்பதுதான் ஜன்னாவின் விஷயத்தில் எவ்வளவு நிதர்சனம்?

ஜன்னா தன்னைச் சுற்றி நிகழ்வதைப் பற்றி, தனதுபோக்கில் உலகத்துக்கு தெரியப்படுத்துவது ஒருவகையில் தனக்கு மகிழ்ச்சி என்றாலும், மற்றொருபக்கம் இஸ்ரேல் இராணுவம் அவளை என்ன செய்யுமோ? என்கிற பயம் இருப்பதாகக் கூறுகிறார் ஜன்னாவின் தாய். ஜன்னாவின் முகநூல் பக்கத்தில், தான் கலந்துகொள்ளும் போராட்டம், இஸ்ரேல் இராணுவம் என எல்லாவற்றையும் அரேபிய மற்றும் ஆங்கில மொழியில் பகிர்கிறாள். ஜன்னாவின் புகைப்படக்கார உறவினர் கூறுகையில்,”இந்த வயதில் பிள்ளைகள் துப்பாக்கியும், ரத்தத்தையும் பார்ப்பதே தவறு என்கின்றன பல நாடுகள், துரதிர்ஷ்டவசமாக நாங்களும் எங்கள் பிள்ளைகளும் பிறந்ததே துப்பாக்கிகளின் சத்தத்துக்கு நடுவேதான். பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு பள்ளியில் படிக்க வேண்டிய வயதில், ஜன்னா கேமிராவுடன் சுற்றித் திரிவதை ஒருபக்கம் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். ஆனால் போர்சூழ்ந்த பூமியில், கண் முன்னே ஒருவர் துப்பாக்கியால் சுடப்படும்போது, உண்மைகளை மட்டுமே நாம் பேச வேண்டும் என பிள்ளைகளிடம் அறிவுறுத்தி விட்டு பொய்யாக எப்படி அமைதியைப் பற்றி எப்படிப் பேசமுடியும்? அவர்களுக்குத் தேவை அமைதி அல்ல, சுதந்திரம். பலருக்கு துப்பாக்கி வழியாகக் கிடைக்கிறது. ஜன்னாவுக்கு கேமரா வழியாக கிடைக்கிறது” என்கிறார்.

"நீ வளர்ந்ததும் என்னவாக ஆசைப்படுகிறாய்" என்று ஜன்னாவிடம் கேட்டால்,"பத்திரிகையாளராக ஆசைப்படுகிறேன்” என கண்கள் மினுமினுக்கக் கூறுகிறாள்.

ஜன்னா எனும் இந்தச் சிறு பட்டாம்பூச்சியின் கனவு நிறைவேறிடவேணும் அமைதிக்கென விடியட்டுமே இந்த பூமி!

2 comments:

  1. Barakallah... mobile phone ஐக் கொண்டு சீரழியும் எம் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி.....

    ReplyDelete

Powered by Blogger.